Published : 07 Feb 2020 08:11 AM
Last Updated : 07 Feb 2020 08:11 AM
நாடு முழுவதும் தன்னார்வ வானிலை கணிப்பாளர்கள் புற்றீசல்போல் பெருகுவதைத் தடுக்க, இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் முக்கிய வானிலை தரவுகளை பார்க்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தாவில் 1864-ம் ஆண்டு வீசிய புயலால் கடும் பாதிப்புகள் ஏற்பட்டன. பின்னர் 1866, 1871 ஆகிய ஆண்டுகளில் பல்வேறு மாநிலங்களில் பருவமழை பொய்த்ததால் வறட்சி நிலவியது.
இந்நிலையில், நாடு முழுவதும்வானிலை முன்னறிவிப்புகளை வழங்க ஏதுவாக பிரிட்டிஷ் இந்தியஅரசால், 1875-ம் ஆண்டு இந்தியவானிலை ஆய்வு மையம் உருவாக்கப்பட்டு, கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்தது. உலக வானிலைத் தரவுகளை பெறுவதற்கு கணினிகள் மிக அவசியமாக இருந்தன. அதனால் இந்தியாவில் கணினி முதன்முத லில் அறிமுகப்படுத்தப்பட்ட சில முக்கிய துறைகளில் வானிலை ஆய்வு மையமும் ஒன்று. 1982-ம்ஆண்டு இந்தியாவின் இன்சாட்செயற்கைக்கோள் விண்ணில்செலுத்தப்பட்ட பின்னர், வரிசையாக பல செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டன.
இந்த செயற்கைக் கோள்கள் வானிலையைக் கணிப்பதற்கு பேருதவியாக இருந்தன. வானிலைத் தரவுகளை செயற்கைக்கோள்கள் மூலம் பெறும், முதல் வளர்ந்து வரும் நாடு இந்தியாதான். சமகால தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு, தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் வானிலை தரவுகள், கணிப்புகள், முன்னறிவிப்புகளை வழங்கி வருகிறது.
இந்தியா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் நிலவும் வானிலை தரவுகள், மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகள் அறியும் வகையில், இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளத்தில், உலகநாடுகளின் வானிலை ஆய்வு மையங்கள் வெளியிட்டு வருகின்றன. வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கும் தகவல்கள் மட்டுமேசெய்தித்தாள்கள், தொலைக்காட்சிகளில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், தற்போது தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, யார் வேண்டுமானாலும் வானிலை விவரங்களை, முகநூல், ட்விட்டர், வாட்ஸ்அப், யூடியூப், டெலிகிராம், இன்ஸ்டாகிராம் போன்றவை வலைதளங்கள் வழியாக பொதுமக்களிடம் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
வானிலை என்பது நொடிக்கு நொடி மாற்றத்துக்கு உள்ளாகக் கூடியது. அதனால் வானிலை ஆய்வு மையமானது, அதற்கே உரிய பொறுப்புடன், மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும் விவரங்களை மட்டுமே, சரியான தருணத்தில் வெளியிட்டு வந்தன.
ஆனால், நாடு முழுவதும் பலர், வானிலை ஆய்வு மைய இணையதளத்தில் இருந்து தரவுகளை எடுத்து, சுயமாகக் கணிக்கிறோம் என்ற பெயரில், வேகமாகசமூக வலைதளங்களில் தகவல்களைப் பரப்புவதாகவும், அதனால்பொதுமக்கள் குழப்பத்துக்கு உள்ளாவதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு ஏராளமான புகார்கள் சென்றுள்ளன. இதைத் தொடர்ந்து முக்கிய வானிலை தரவுகளை இணையதளம் வழியாக அனைவரும் பார்வையிட முடியாத வகையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தன்னார்வ அடிப்படையில் வானிலை முன்னறிவிப்புகளை வெளியிடுபவர்கள் யாரும், சொந்தமாகக் கருவிகளை வைத்து கண்காணிக்கவில்லை. அவர்கள் அது சார்ந்த படிப்பையோ, அங்கீகரிக்கப்பட்ட நிறுவன பயிற்சியையோ முடித்தவர்களும் அல்ல. இந்திய வானிலை ஆய்வு மைய இணையதளம்தான் அவர்களுக்கு முக்கிய ஆதாரம். இதை வைத்து தாங்களே கணித்தது போன்று தங்களை பிரபலப்படுத்திக் கொள்கின்றனர். அவர்களில் பலர் வெளியிடும் தகவல்கள் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்துகின்றன.
இதனால் வானிலை ஆய்வு மையம் சார்பில், உலக நாடுகளின் தரவுகள், செயற்கைக்கோள் தரவுகள், ரேடார் தரவுகள் அடிப்படையில், கணினி மூலமாக உருவாக்கப்படும் மாடல்கள், காற்றுவீசும் திசை குறித்த அனிமேஷன்கள், முக்கிய செயற்கைக்கோள் புகைப்படங்கள், கடல் மற்றும் நில வெப்பநிலை குறித்த வரைபடங்கள், ரேடார் படங்கள் உள்ளிட்டவற்றை, துறை அலுவலர்களைத் தவிர்த்து யாரும் பார்க்க முடியாத வகையில் இணையதளத்தில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
பொதுமக்களுக்குத் தேவையான பொதுவான விவரங்களை உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் முகநூல் மற்றும் ட்விட்டர்பக்கங்கள் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தொடங்கப்பட்டுள்ளன. இதேபோன்று, நாடு முழுவதும் உள்ள மற்றமையங்களிலும் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT