Published : 06 Feb 2020 05:21 PM
Last Updated : 06 Feb 2020 05:21 PM
200 மடங்குக்கு மேல் கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளதைக் கண்டித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தை மாணவ, மாணவிகள் முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி காலாப்பட்டில் புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். முன்னெப்போதும் இல்லாத வகையில் மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதையடுத்து மாணவ, மாணவிகள் இன்று (பிப்.6) பேரணியாக வந்து, துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட வந்தனர். அதையடுத்து தடுப்புகள் வைத்து மாணவர்கள் தடுக்கப்பட்டனர். ஆனால், தடுப்புகளை அகற்றியும் தூக்கியெறிந்தும் துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தொடர்பாக, மத்திய பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவர் பரிட்சய் கூறுகையில், "புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வி ஆண்டில் கல்விக் கட்டணம் 200 முதல் 300 மடங்கு வரை உயர்த்தப்பட்டது. அதனைக் கண்டித்து மாணவர் பேரவை மற்றும் பல்வேறு மாணவர் அமைப்புகள் சார்பாக உயர்த்தப்பட்ட கல்விக் கட்டணம் மற்றும் புதுச்சேரி மாணவர்களின் இலவசப் பேருந்து சேவைக்குக் கட்டணம் நிர்ணயித்ததைத் திரும்பப் பெற வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டோம்.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக துணைவேந்தர் தலையிட்டார். மாணவர்களின் கோரிக்கையைப் பரிசீலிக்க நிர்வாகம் மற்றும் மாணவர் பேரவை நிர்வாகிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. அக்குழுவின் கூட்டம் 3 முறை நடைபெற்றது.
ஆனால், அக்குழு உயர்த்தப்பட்ட கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுவது குறித்து ஆக்கபூர்வமான முடிவை மேற்கொள்ளவில்லை. மாறாக, கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற முடியாது என்றனர்.
20 ஆண்டுகளுக்கும் மேலாக மாணவர்களுக்கு வழங்கப்பட்ட இலவசப் பேருந்து சேவைக்குக் கட்டணம் வசூலிப்பதிலேயே குறியாக இருந்தனர். இதற்கு மேல் பல்கலைக்கழக நிர்வாகத் தரப்புடன் பேச்சுவார்த்தை என்பது கண்துடைப்பாகவே அமையும் என்பதால் உயர்த்தப்பட்ட கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறக்கோரி துணைவேந்தர் அலுவலகம் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக நிர்வாக அலுவலகம் உள்ள கட்டிடத்தை முற்றுகையிட்டுள்ளோம்" என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவ, மாணவிகள் கூறுகையில், "உயர்த்தப்பட்ட கட்டணங்களைக் குறைக்க வலியுறுத்தி கடந்த வருடம் முதல் போராடி வருகின்றோம். இதுவரை குறைக்கப்படவில்லை. தற்போது மீண்டும் பேருந்து கண்டனம் கூடாது, உயர்த்தப்பட்ட கட்டணத்தைக் குறைக்க வேண்டும், எந்தவித புதிய கட்டணத்தையும் விதிக்கக்கூடாது என வலியுறுத்திப் போராடுகிறோம். இதை துணைவேந்தர் அறிவிக்கும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம்" என்றனர்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT