Published : 06 Feb 2020 01:06 PM
Last Updated : 06 Feb 2020 01:06 PM
குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகளை ரஜினி ஆழ்ந்து சிந்தித்து தெரிந்துகொள்ளாதது வருத்தமளிக்கிறது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கம் அடுத்த கோவளம் பேருந்து நிலையம் அருகே குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக்கோரி திமுக சார்பில் கையெழுத்து இயக்கப் போராட்டம் இன்று (பிப்.6) நடைபெற்றது. இதில், திமுக தலைவர் முக.ஸ்டாலின் பங்கேற்றார். மேலும், முஸ்லிம் மக்கள் உள்பட ஏராளமானோர் பங்கேற்று மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் பேசியதாவது:
"முஸ்லிம் மக்கள், இலங்கை வாழ் ஈழத் தமிழர்களைப் பாதிக்கும் வகையில் குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. மேலும், பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் இச்சட்டத்துக்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அதிமுக மற்றும் பாமக ஆதரவு தெரிவித்து வருகின்றன.
தமிழக சட்டப்பேரவையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், ஆளுங்கட்சி செவி சாய்க்காமல் உள்ளது. அதனால், மத்திய மற்றும் மாநில அரசின் நிலையை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அனைத்து அரசியல் கட்சிகளும் மற்றும் அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்புகளும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. அதனால், திமுக தொடர்ந்து கையெழுத்து இயக்கத்தை தீவிரப்படுத்தியுள்ளது. மாணவர்களும் நிலையை உணர்ந்து போராடி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவர்கள் ஆழ்ந்து சிந்தித்தும் யோசித்தும் முடிவு செய்ய வேண்டும் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அதனால், முதலில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தால் என்னென்ன பாதிப்புகள் என்பன குறித்து ரஜினிகாந்த் ஆழ்ந்து சிந்தித்து முடிவு எடுத்திருக்க வேண்டும். இதனால், ஏற்படும் கஷ்டங்கள் மற்றும் பாதிப்புகளை ரஜினி தெரிந்துகொள்ளாதது வருத்தமளிக்கிறது. எனினும், குடியுரிமைத் திருத்தச் சட்டம் குறித்து ரஜினி தெரிந்துகொண்டால் அவரது கருத்தை மாற்றிக் கூறுவார் என நம்புகிறேன்".
இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்தார்.
தவறவிடாதீர்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT