Published : 06 Feb 2020 11:34 AM
Last Updated : 06 Feb 2020 11:34 AM

சிறைச்சாலைகளில் குற்றங்களுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்க: ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

சிறைச்சாலைகளில் குற்றங்களுக்கு இடமில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (பிப்.6) வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் உள்ள அனைத்து சிறைச்சாலைகளையும், சிறையில் உள்ள கைதிகளையும், பணியாளர்களையும் முறையாக தொடர்ந்து கண்காணித்து கைதிகளுக்கு பாதுகாப்பு வழங்குவதோடு, முறைகேடுகளுக்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதற்காக தமிழக அரசு தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர் உள்ளிட்ட 9 மத்திய சிறைகள் உள்ளன.

மேலும் மாவட்ட சிறைகள், கிளை சிறைகள், சிறார் சிறைகளும் உள்ளன. எந்த சிறைச்சாலையாக இருந்தாலும் அனைத்தையும் முறையாக கண்காணித்து விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது சிறைநிர்வாகத்தின் கடமையாகும். ஆனால் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகள் சிலவற்றில் கைதிகள் சிறைச்சாலை விதிகளை மீறி செல்போன், போதைப்பொருட்கள் போன்றவற்றை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

உதாரணத்திற்கு சென்னை புழல் மத்திய சிறையில் கைதிகளுக்கு சலுகைகள் வழங்கப்படுவதும், அலுவலர்கள், பணியாளர்கள் முறைகேட்டுக்கு துணை போவதாகவும் செய்திகள் தெரிவித்தன. அதே போல மாநிலத்தில் உள்ள மற்ற சில சிறைச்சாலைகளிலும் விதிகளுக்கு அப்பாற்பட்டு விடுமுறை நாட்களிலும் பார்வையாளர்களை அனுமதிப்பதும், சில கைதிகளுக்கு சலுகைகள் அளிப்பதும், சரியாக கண்காணிப்பதில்லை என்பதும் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் எழுகின்றன.

குறிப்பாக, சிறைச்சாலையையும், குற்றம்சாட்டப்பட்டு சிறைக்கு வந்த கைதிகளையும் நாள் முழுவதும் முறையாக கண்காணிக்க வேண்டும்; போதைப்பொருளையோ, செல்போனையோ அல்லது வேறு எந்த தனிப்பட்ட வசதியையோ சிறைநிர்வாகம் தெரிந்தோ, தெரியாமலோ அனுமதிக்கக்கூடாது.

அதே போல, கைதிகளுக்கு இடையே சண்டை, சச்சரவு ஏற்படாமல் இருக்கவும், கைதிகளை திருத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதும், அவர்களுக்கு உரிய வசதிகளை மட்டுமே வழங்கி முழு பாதுகாப்பு கொடுப்பதும் முறையானது, சரியானது.

எனவே, சிறைச்சாலைகளில் முறைகேடுகள் நடைபெறாமல் இருக்கவும், பாரபட்சம் காட்டாமல் இருக்கவும், விதிமீறல்களில் ஈடுபடும் அலுவலர்கள், பணியாளர்களை கண்காணிக்கவும், சிறைகளை முறையாக பராமரித்து அடிப்படை வசதிகளை முழுமையாக செய்து கொடுக்கவும், தவறு நடந்திருப்பின் உரிய நடவடிக்கையை எடுக்கவும் சிறைநிர்வாகம் முன்வர வேண்டும்.

மேலும், தமிழக அரசு மாநிலம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளை தொடர் நடவடிக்கை மூலம் முறையாக, சரியாக கண்காணித்து குற்றச்சாட்டுக்கு இடம் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்" என ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x