Published : 06 Feb 2020 08:37 AM
Last Updated : 06 Feb 2020 08:37 AM

மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.4,057 கோடி நிதி: 10 புதிய திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதால் பணிகள் முடங்கும் அபாயம்

சென்னை

2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.4,057 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10 புதிய திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதால், இத்திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2020-ம் ஆண்டுக்கான மத்தியபட்ஜெட்டில் ரயில்வே துறைக்குரூ.70 ஆயிரம் கோடி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, தெற்கு, வடக்கு, மேற்கு, வடகிழக்கு, மத்திய ரயில்வே உள்ளிட்ட மொத்தமுள்ள 17 மண்டலங்களுக்கு இந்த நிதி பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

இதில், தெற்கு ரயில்வேக்கு பல்வேறு திட்டங்களுக்கு ரூ.2,876 கோடி நேரடியாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, கடன், கடன் பத்திரம் வெளியீடு உள்ளிட்டவை மூலம் ரூ.1,181 கோடி என மொத்தம் ரூ.4,057 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தலா ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு

தமிழகத்தில் சென்னை - மாமல்லபுரம் - கடலூர் (179 கி.மீ), திண்டிவனம் - செஞ்சி - திருவண்ணாமலை (70 கி.மீ), அத்திப்பட்டு - புத்தூர் (88 கி.மீ), ஈரோடு - பழநி (91 கி.மீ),பெரும்புதூர் - இருங்காட்டுக்கோட்டை - கூடுவாஞ்சேரி (60 கி.மீ), மதுரை - அருப்புக்கோட்டை - தூத்துக்குடி, மொரப்பூர் - தருமபுரி உள்ளிட்ட 10 புதிய ரயில் பாதை திட்டங்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் இத்திட்டங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ராமேசுவரம் - தனுஷ்கோடி புதிய பாதை திட்டத்துக்கும் கடந்த ஆண்டில் ரூ.49 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு வெறும் ரூ.2 கோடியே 70 லட்சம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பணியும் முடங்கும் நிலை உருவாகும்.

பாதை புதுப்பிக்க ரூ.730 கோடி

அகலப்பாதை திட்டத்துக்கு ரூ.175 கோடியும், இரட்டை பாதைதிட்டத்துக்கு ரூ.57 கோடியும், மேம்பாலங்கள் உள்ளிட்ட பாலங்களை கட்ட ரூ.335 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அகலப்பாதை திட்டங்களில் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் மதுரை -போடிநாயக்கனூர் திட்டத்துக்கு ரூ.75 கோடியே 18 லட்சமும், திருத்துறைப்பூண்டி - அகஸ்தியன் பள்ளி, மன்னார்குடி - பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை ரயில் திட்டங்களுக்கு என ரூ.100 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பாதைகளைப் புதுப்பித்து பாதுகாப்பான பயணத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்தமாக ரூ.730 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

ரயில்வே அதிகாரிகளிடம் இதுதொடர்பாக கேட்டபோது, ‘‘தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்து நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு ரூ.4057 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், மதுரை - மணியாச்சி - தூத்துக்குடி, மணியாச்சி - நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய திட்டங்களுக்கு ரூ.1,181 கோடியை கடன்பத்திரம் வெளியீடு உள்ளிட்டவை மூலம் பெற்றுக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் நேரடியாக 3,050 கோடியும், கடன்பத்திரம், கடன் உள்ளிட்டவை மூலம் ரூ.851 கோடி என மொத்தம் ரூ.3,901 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனவே, கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ரூ.156 கோடி அதிகமாகும்’’ என்றனர்.

டிஆர்இயு மூத்த நிர்வாகி ஆர்.இளங்கோவன் கூறும்போது, ‘‘மற்ற மாநிலங்களைக் காட்டிலும்தமிழகத்தில் அன்றாட போக்குவரத்தில் ரயில்வே இன்றியமையாததாகி விட்டது. ஆனால், மத்திய பட்ஜெட்டில் புதிய திட்டங்களுக்கு நிதி பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 10 புதிய ரயில் திட்டங்களும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதுபோல், ரயில்வேக்கு வருவாய் தரக்கூடிய முக்கியமான வழித்தடங்களில் தனியார் ரயில்களை இயக்க அனுமதிப்பது ரயில்வேயின் வருவாயைப் பாதிக்கும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x