Published : 06 Feb 2020 08:32 AM
Last Updated : 06 Feb 2020 08:32 AM
சென்னை, மதுரை, ராணிப்பேட்டை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ.22 கோடியே 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் பள்ளி, விடுதிக் கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அரசு ஆதிதிராவிடர் நல ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூ.7 கோடி மதிப்பில் தலா 36 வகுப்பறைகள் கொண்ட புதிய பள்ளிக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், சென்னை- புளியந்தோப்பு, திருவள்ளூர்- செவ்வாய்ப் பேட்டை, செங்கல்பட்டு - பதுவஞ்சேரி, கிளாம்பாக்கம், பாலூர், கோவை - வெல்ஸ்புரம், நெல்லை - நல்லம்மாள்புரம் ஆகிய இடங்களில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலை மற்றும்மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.6 கோடியே 96 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வக கூடங்கள், பள்ளிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மதுரை- பரவை, தேனி - வருசநாடு, தஞ்சை - நடுவிக்கோட்டை, புதுக்கோட்டை- சுப்பிரமணியபுரம், பெரம்பலூர் - நெய்க்குப்பை, திருவண்ணாமலை - கண்ணக்குருக்கை, நெல்லை - பேட்டை ஆகிய இடங்களில் ரூ.7 கோடியே 96 லட்சம் மதிப்பில் ஆதிதிராவிடர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்காக 7 விடுதிக் கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.
மேலும், திருவண்ணாமலை - ஜமுனாமரத்தூரில் ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பில் பழங்குடியினர் மாணவர்களுக்கான தொழிற்பயிற்சி நிலைய விடுதிக் கட்டிடம் என ரூ.22 கோடியே 97 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை கட்டிடங்களை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
மேலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையில் பணியில் இருக்கும்போது மறைந்த21 அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு, கருணை அடிப்படையில் 16 பேருக்கு இளநிலை உதவியாளர் மற்றும் 5 பேருக்கு தட்டச்சர்பணி நியமன ஆணைகளையும் முதல்வர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.சி.வீரமணி, நிலோபர் கபீல், வீ.எம்.ராஜலட்சுமி, தலைமைச் செயலர் கே.சண்முகம். ஆதிதிராவிடர் நலத் துறைச் செயலர் எஸ்.மதுமதி, ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையர் ச.முனியநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT