Published : 05 Feb 2020 05:28 PM
Last Updated : 05 Feb 2020 05:28 PM
தேனி மாவட்டம் சின்னமனூரில் குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கழிவு கிடங்கில் கடந்த 3நாட்களுக்கு முன்பு தீவிபத்து ஏற்பட்டது. இதன் கழிவுகள் அகற்றப்படாமலே உள்ளதால் கருகல் நெடியினால் மூச்சுத்திணறல், சுவாசப்பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது.
சின்னமனூர் புதிய பேருந்துநிலையம் பின்புறம் 2-வது வார்டைச் சேர்ந்த பகுதி ராதாகிருஷ்ணா மில் தெரு உள்ளது. இங்கு சுமார் 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மத்தியில் பிளாஸ்டிக் கழிவு கிடங்கு ஒன்று உள்ளது. கேரிபேக், பல்வேறு வகையான பயன்படுத்தப்பட்டபி ளாஸ்டிக் கழிவுகள் இங்கு சேகரிக்கப்பட்டு டன்கணக்கில் வெளியூருக்கு அனுப்பப்படுவது வழக்கம்.
இந்த கிடங்கு, நான்கு பக்கம் உள்ள குடியிருப்புகளின் பொதுச்சுவரையும், சுற்றுச்சுவரையும் பயன்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த அக்டோபர் 10-ம்தேதி தீவிபத்து ஏற்பட்டு அணைக்கப்பட்டது. சுற்றிலும் குடியிருப்புகளும், ஜன்னல், மாடி உள்ளதால் தீயினால் பாதிப்பு ஏற்படும் என்று இப்பகுதியில் உள்ளவர்கள் நகராட்சிக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். இருப்பினும் நடவடிக்கை இல்லை.
இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை மீண்டும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் கிடங்கில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் கருகின. தென்னை மர உயரத்திற்கு கொழுந்துவிட்டு எரிந்த தீயினால் வீடுகளின் ஜன்னல், மதில்சுவர்கள், மின்இணைப்பு உள்ளிட்டவையும் கருகின. மாடியில் உள்ள குடிநீர் தொட்டியும் உருகியது. பலரும் தங்கள் வீடுகளைக் காப்பாற்ற நீரை வீட்டின் சுவரில் கொட்டினர்.
தீயணைப்புத்துறையினர் ஒருநாள் முழுவதும் போராடி இத்தீயை அணைத்தனர். இருப்பினும் தொடர்ந்து புகையும், கருகல் நெடியும் உள்ளதால் இப்பகுதி பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர்.
இது குறித்து இப்பகுதியைச் சேரந்த பெர்னாட்ஷா கூறுகையில், மோசமான தீவிபத்தில் சிக்கி மீண்டுள்ளோம். ஜன்னல் கண்ணாடி வெடித்ததுடன், குடியிருப்புகளுக்குள் புகை சூழ்ந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டது. வெளியில் வந்தபோது பிளாஸ்டிக்குகள் வெடித்து தீப்பந்து போல பறந்து வந்து விழுந்தன. தொடர்ந்து இரண்டுநாட்களாக வீட்டிற்குள் புகை மண்டிக்கிடக்கிறது. நகராட்சியி்ல் இது குறித்து புகார் அளித்துள்ளோம் என்றார்.
நாகராஜ் கூறுகையில், கிடங்கில் ஏற்பட்ட தீ காட்டுத்தீ போல அவ்வளவு உக்கிரமாக இருந்தது. பலரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து தூரமாய் போய் நின்று கொண்டோம். இந்தக் குடவுனை விதிமுறை மீறி அமைத்துள்ளனர். தென்னை, மா, வேம்பு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட மரங்கள் கருகின. குடியிருப்புகளுக்கு மிக நெருக்கமாக ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்தின் பாதிப்பில் இருந்து இன்னமும் மீளமுடியவில்லை. கண் எரிச்சல், சுவாசக்கோளாறு என்று தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதன் கழிவுகள் கூட இன்னமும் அகற்றப்படாமல் குவிந்து கிடக்கிறது என்றார்.
இது குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது இது குறித்து புகார் வந்துள்ளது. அதன் உரிமையாளர் உடல்நலக்குறைவினால் மருத்துவமனையி்ல் உள்ளார். பிளாஸ்டிக் கழிவுகள் என்பதால் அவற்றை முறைப்படி அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT