Published : 05 Feb 2020 04:49 PM
Last Updated : 05 Feb 2020 04:49 PM
ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. இதனையடுத்து படப்பிடிப்பிலிருந்த நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் நேரில் விசாரணை நடத்தினர்.
நடிகர் விஜய் நடித்த 'பிகில்' படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்தது. மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம் வசூலை அள்ளிக் குவித்தது. விஜய்க்கு பெரிய தொகை சம்பளமாகக் கொடுத்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் 'பிகில்' படத்தைத் தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சென்னை தி.நகரில் உள்ள வீடு, தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் உட்பட 20 இடங்களில் இந்த சோதனை நடந்தது.
இதையடுத்து தனது அடுத்த படமான 'மாஸ்டர்' படத்துக்கான படப்பிடிப்பில் நெய்வேலி என்.எல்.சி அருகே நடித்துக்கொண்டிருந்த நடிகர் விஜய்யிடம் வருமான வரித்துறையினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். 'பிகில்' தயாரிப்பு செலவு, ரொக்கப் பரிவர்த்தனை ஆகியவை குறித்து இந்த விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.
'மாஸ்டர்' படப்பிடிப்பில் இருந்த விஜய்யிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 6 பேர் விசாரணை நடத்தியதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. அவர் படப்பிடிப்பில் இருப்பதால் இன்னொரு நாள் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதாக விஜய் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், அவரிடம் நேரில் விசாரணை நடத்த வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்ற அதிகாரிகள், படப்பிடிப்புத் தளத்தில் எதுவும் பேச முடியாது என்பதால் அவரைத் தனியாக ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்யிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்த முக்கியக் காரணம் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த 'பிகில்' படத்தில் அதிகப்படியான செலவு விஜய்யின் சம்பளம் என்று கூறப்படுகிறது. விஜய்யின் சம்பளம் குறித்து அவரிடம் விசாரணை நடத்தவே வருமான வரித்துறை அதிகாரிகள் அங்கு சென்றதாக வருமான வரித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளத்தைப் பெற்ற விதம், பணமாகவா? வங்கிப் பரிவர்த்தனையா? ஒப்பந்தம் போடப்பட்டதா? அனைத்துக்கும் ஆவணங்கள் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. இது தவிர பட வசூல் குறித்த பல்வேறு கேள்விகள் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT