Published : 05 Feb 2020 04:53 PM
Last Updated : 05 Feb 2020 04:53 PM

''மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுகின்றனவா?''- ரஜினி விமர்சனத்துக்கு ஸ்டாலின் பதில் 

மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக ஒலிக்கும் குரல்கள் புதிதல்ல. பழைய குரல்தான். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் ஆதிக்க மனப்பான்மையினர் அப்படித்தான் திரித்துச் சொல்லி, திசை திருப்பப் பார்த்தார்கள் என ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சிஏஏ தொடர்பாக ரஜினி எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்தார். இன்று (பிப்ரவரி 5) காலை சென்னையில் தனது இல்லத்திலிருந்து வெளியே கிளம்பும்போது அங்கிருந்த பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி.

அப்போது பேசும்போது, ''மாணவர்களுக்குச் சொல்லிக் கொள்வது எல்லாம் போராட்டத்தில் இறங்கும் போது தீர யோசித்து ஆராய்ந்து, பேராசிரியர்களிடம் பேசி இறங்குங்கள். இல்லையென்றால் உங்களை அரசியல்வாதிகள் உபயோகிக்கப் பார்ப்பார்கள். அப்படி இறங்கிவிட்டால் உங்களுக்குத் தான் பிரச்சினை. காவல்துறையினர் எப்படி நடந்து கொள்வார்கள் எனத் தெரியாது. எஃப்.ஐ.ஆர் போட்டார்கள் என்றால் வாழ்க்கையையே முடிந்து போய்விடும்" என்றார் ரஜினி.

இந்நிலையில் ரஜினியின் பேச்சுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்ட முகநூல் பதிவு:

“இந்தியாவை மதரீதியாகப் பிளவுபடுத்தும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக திமுக சார்பிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கையெழுத்து இயக்கத்தில் இன்று நந்தனம் கல்லூரி மாணவர்கள் பேரார்வத்துடன் வந்து திரளாகப் பங்கேற்றுக் கையெழுத்திட்டது மகிழ்ச்சி நிறைந்த ஆச்சரியத்தை அளித்தது.

அவர்களிடம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை விளக்க நினைத்த போது, “இதன் ஆபத்துகளை உணர்ந்து தான் நாங்களாகவே கையெழுத்திட முன்வந்துள்ளோம்” என்ற மாணவர்கள் எவ்வளவு தெளிவாகவும் தீர்மானமாகவும் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

இந்தப் போராட்டமே டெல்லியிலும் பிற இடங்களிலும் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம்தான். அரசியல் இயக்கங்களுக்கு ஊக்கமும் ஆக்கமும் அளித்திடும் சக்தியாக அமைந்தவர்களும் மாணவர்கள்தான். அவர்களுடன் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், ராமச்சந்திரா குகா போன்ற வரலாற்றாசிரியர்கள், அறிஞர் பெருமக்கள் எனப் பலரும் சிஏஏவை எதிர்த்து வீதிக்கு வந்து போராடியதை நாடு அறியும்.

இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களும் மத-மொழி வேறுபாடுகள் கடந்து, ஆண்-பெண் பேதமின்றி, குடியுரிமை திருத்தச் சட்டம் உள்ளிட்டவற்றை எதிர்த்து, தொடர் போராட்டத்தில் பங்கேற்று வருகிறார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இவற்றுடன் கூடுதலாக, தாய்த் தமிழகத்தில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமையும் வலியுறுத்தப்படுகிறது.

அவர்களுக்கு இரட்டைக் குடியுரிமை என்பது ஏமாற்று வேலை என்பதையும், இலங்கை அரசின் சட்டம் அதனை அங்கீகரிக்கவில்லை என்பதையும், இந்திய அரசும் அதனை ஏற்கவில்லை என்பதும் நாட்டு நடப்புகளை அறிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். அதனால்தான் மாணவர்களின் போராட்டம் இந்தியா முழுவதும் பரவியுள்ளது.

ஈழத் தமிழர்க்கு இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டும் என்று நாங்கள் கேட்டபோதெல்லாம், இரட்டைக் குடியுரிமைக்கு வலியுறுத்தி வருகிறோம் என்று ஏமாற்றி வந்த அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் எங்கே?

"அரசியல் சாசன பிரிவு 9-ன் படி யாருக்கும் இரட்டைக் குடியுரிமை வழங்க இயலாது" என்று உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் சொல்லியிருப்பது தெரியுமா? உங்கள் பசப்பு நாடகத்தை முடிக்கப் போகிறீர்களா? அல்லது நடிப்பைத் தொடரப் போகிறீர்களா?

ஒன்றரை லட்சம் தமிழர் வாழ்க்கையை ஒற்றை வரியில் முடித்த இந்த மத்திய அரசு யாருக்கானது ? மாணவர்களை அரசியல் கட்சிகள் தூண்டிவிடுவதாக ஒலிக்கும் குரல்கள் புதிதல்ல. பழைய குரல்தான். இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் ஆதிக்க மனப்பான்மையினர் அப்படித்தான் திரித்துச் சொல்லி, திசை திருப்பப் பார்த்தார்கள்.

இறுதியில், மொழிப்போரில் வென்றது தெளிவாகவும் திடமாகவும் இருந்த மாணவர்கள்தான். அதைப் போல தற்போது மாணவர்கள்-பெண்கள்-அறிஞர் பெருமக்கள்-கலைஞர்கள் என சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கும் ஜனநாயக முறையிலான அமைதி-அறவழிப் போராட்டங்களும் தனது இலக்கை அடைந்து, நிச்சயம் வெற்றி பெறும்”.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x