Last Updated : 05 Feb, 2020 03:47 PM

1  

Published : 05 Feb 2020 03:47 PM
Last Updated : 05 Feb 2020 03:47 PM

ரஜினி காவி நிறத்தோடு தன்னை இணைத்துக் கொண்டதற்கான அறிகுறியே அவரின் பேச்சு: தொல்.திருமாவளவன்

நெல்லை

தேசிய குடிமக்கள் பதிவேடு குறித்து நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த கருத்து அவர் காவி நிறத்தோடு தன்னை இணைத்துக் கொண்டதற்கான அறிகுறி என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

முன்னதாக இன்று காலை நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "என்பிஆர் ரொம்பவே முக்கியம். 2021-ல் இந்திய நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை எடுத்துதான் ஆகவேண்டும். அதில் யார் உள்நாட்டுக்காரர்கள், வெளிநாட்டுக்காரர்கள் என்பது மக்களுக்குத் தெரிய வேண்டாமா?" என்று பேசியிருந்தார்.

இதுவரை குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியன குறித்து கருத்தேதும் தெரிவிக்காமல் இருந்த ரஜினிகாந்தின் மவுனக் கலைப்பு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், நெல்லையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரஜினியின் பேச்சு குறித்து தனது கருத்தைப் பதிவு செய்தார்.

திருமாவளவன் பேசும்போது, "ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே தன்னை சங் பரிவார், பாரதிய ஜனதா கட்சி ஆதரவாளராகக் காட்டிக் கொள்வதை சாதாரணமாக நினைக்கக்கூடாது. அவர், காவி நிறத்தோடு தன்னை இணைத்துக் கொண்டுவிட்டார் என்பதற்கான அறிகுறி தான் இது" என்றார்.

குடிமக்களை அச்சுறுத்தும் கணக்கெடுப்பு..

தொடர்ந்து பேசிய அவர், "மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை எடுக்கப்படுவது வழக்கம்தான். ஆனால் தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது குடிமக்களை அச்சுறுத்தக் கூடிய பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தான ஒன்றே. குடிமக்கள் அல்லாதோர் என அடையாளம் காட்டப்படுபவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்படுவார்கள்" எனக் கூறினார்.

அரசின் உறுதி தொடருமா?

5,8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து குறித்து, "தமிழக அரசு ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வைக் கைவிட்டது வரவேற்கத்தக்கது. ஆனால் மத்திய அரசு நடைமுறைப்படுத்தும் தேசிய கல்விக் கொள்கையில் ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு வரையறுக்கப்பட்டுள்ளது. அப்போதும் தமிழக அரசு இதே நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும்" என கோரிக்கை வைத்தார்.

ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய அரசு ட்ரஸ்ட் அமைத்திருப்பது போல் பாபர் மசூதி கட்ட மத்திய அரசு ஒரு குழு அமைக்க அமைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x