Published : 04 Feb 2020 09:17 PM
Last Updated : 04 Feb 2020 09:17 PM

அழியும் மை கொண்டு எழுதிய விடைத்தாள்கள் நிறம் மாறின: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விசாரணையில் திடீர் திருப்பம்

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு விசாரணையில் திடீர் திருப்பமாக, அழியும் மை பேனா கொண்டு நிரப்பப்பட்ட விடைத்தாள்கள் நிறம் மாறியதை சிபிசிஐடி போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஆனால், இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததால் அவர்களின் தொடர்பு குறித்தும் போலீஸார் விசாரணை நடத்த உள்ளனர்.

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வெழுதியவர்களில் குறிப்பிட்ட மாவட்டத்தில் தேர்வெழுதியவர்கள் முதல் நூறு இடத்தில் 50 இடங்களுக்குள் வென்றனர். இதன் பின்னணியை ஆராய்ந்தபோது அதன் பின்னால் மிகப்பெரிய முறைகேடு நடந்தது தெரியவந்தது. இரண்டு மூன்று விதங்களில் முறைகேடு நடத்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

அழியும் மை பேனா மூலமும் விடை எழுதி பின்னர் வேறு விடைத்தாள்களை அங்கு வைக்கும் முறையும், ஒரே எண்ணில் டூப்ளிகேட் விடைத்தாள்களைத் தயார் செய்து விடையை அதில் எழுதி தேர்வு முடிந்து வேனில் விடைத்தாள் கொண்டுவரும்போது மாற்றியது போன்ற பல முறைகேடுகள் நடந்தன.

இதில் தேர்வெழுதிய 99 பேரின் வினாத்தாள்களில் பெரும்பாலானவை மஞ்சள் நிறமாக மாறியுள்ளதை சிபிசிஐடி போலீஸார் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு நிறம் மாறியதை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கவனிக்காமல் விட்டுள்ளனர். இதுகுறித்த விசாரணையைத் தொடங்கியுள்ளது சிபிசிஐடி.

ஓஎம்ஆர் ஷீட் எனப்படும் வினாத்தாளை ஸ்கேன் செய்த தனியார் நிறுவனத்தினரையும் விசாரிக்க சிபிசிஐடி போலீஸார் முடிவு செய்துள்ளனர். வினாத்தாள்களைக் கையாண்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட உள்ளனர்.

முறைகேடாகத் தேர்வு எழுதியதாக சந்தேகப்பட்ட 99 பேரில் தேர்வு எழுதிய 39 பேர் பணம் கொடுத்து விடைத்தாளை இடைத்தரகர் கும்பல் மூலம் மாற்றியது தெரிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அழியும் மை பேனாவால் எழுதப்பட்ட மீதமுள்ள 60 விடைத்தாள்களை அதிகாரிகள் கண்டுபிடிக்காமல் விட்டுள்ளனர். இதற்குக் காரணம் என்ன? என்பது குறித்து சிபிசிஐடி போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x