Last Updated : 04 Feb, 2020 04:24 PM

1  

Published : 04 Feb 2020 04:24 PM
Last Updated : 04 Feb 2020 04:24 PM

மனநலம் குன்றிய மகளின் 12 வார கருவைக் கலைக்க அனுமதி கோரி தாய் வழக்கு: மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு

மதுரை

வலிப்பு நோயால் பாதிக்கப்பட்ட மனநலம் குன்றிய இளம்பெண்ணின் 12 வார கருவை கலைக்க, அனுமதி கோரி வழக்கில், பாதிக்கப்பட்ட பெண்ணை சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் முறையாக பரிசோதித்து அறிக்கை தாக்கல் செய்ய சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி முதல்வருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்த 55 வயது பெண் ஒருவர்,உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில்," கணவரை இழந்த நான், ஆடு மேய்க்கும் தொழிலை செய்து வருகிறேன்.

எனது இரண்டாவது மகளுக்கு 26 வயதாகிறது. அவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். மனநலம் குன்றியவரும்கூட. ஆகவே, அவரை வெளியில் அனுப்புவதில்லை. வீட்டிலேயே இருந்து வந்தார். நானும் எனது மகளும் மட்டும் வீட்டில் வசித்து வருகிறோம். நான் காலையில் ஆடு மேய்க்க சென்றால் மாலையில்தான் வீடு திரும்புவேன்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்ட பக்கத்து வீட்டைச் சேர்ந்த முதியவர் காசி எனது மகளை பாலியல் வன்கொடுமை செய்தார். இதுகுறித்து நான் அளித்த புகாரின் பேரில், சிவகங்கை மாவட்ட அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, காசி சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் எனது மகள் 12 வார கர்ப்பிணியாக உள்ளார். அவர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் எந்தவிதமான புரிதலும் இல்லாமல் உள்ளார். குழந்தை பெற்றுக்கொள்வதற்கான நல்ல உடல் மற்றும் மனநிலையில் அவர் இல்லை.

ஆகவே, அவரது வயிற்றில் வளரும் கருவைக் கலைக்க சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

முன்னதாக, சிவகங்கை அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் கொண்ட குழு அமைத்து அவருடைய உடல்நிலை, மனநிலை கருக்கலைப்புக்கு உகந்ததா? என்று பரிசோதனை செய்து கருகலைப்புக்கு அனுமதி வழங்கி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை இன்று விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா மனுதாரர் மற்றும் பாதிக்கப்பட்ட பெண் சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவ குழுவினர் முன் ஆஜராகவும், பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு தேவையான பரிசோதனைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்பிக்கவும் சிவகங்கை அரசு மருத்துவமனை முதல்வருக்கும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை பிப்ரவரி 12 -ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x