Last Updated : 01 Aug, 2015 10:06 AM

 

Published : 01 Aug 2015 10:06 AM
Last Updated : 01 Aug 2015 10:06 AM

காமராஜர் காலத்திலேயே கள்ளுக்கு எதிராக போராடியவர் சசிபெருமாள்

சேலம் மாவட்டம் இடங்கண சாலை பகுதியைச் சேர்ந்த சசிபெருமாளின் மதுவிலக்கு கொள்கைக்கு அடித்தளமிட்டவர் முன்னாள் முதல்வர் காமராஜர். கள்ளுக்கு எதிராக அவர் போராடிய காலத்தில் சசிபெருமாள் பூரண மதுவிலக்கு வேண்டுமென முதல் போராட்டத்தை தொடங்கியதாக அவரது சகோதரர் வெங்கடாஜலம் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது: ‘‘எங்களது அப்பா கந்தசாமி, அம்மா பழனியம்மாள், இரண்டு பேரும் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டனர். ஏழை குடும்பம். சின்ன வயசுல நாங்க கைத்தறி கூலி வேலைக்கும், விவசாய கூலிக்கும் போவோம். எட்டாவது வரைக்கும் சசி படித்திருக்கிறார்.

கள்ளுக்கு எதிரா காமராஜர் போராடிய காலத்தில், சசிக்கு 16, 17 வயசு இருக்கும். அப்பவே ரோட்டுல இறங்கி கள்ளுக் கடைய மூடணும்னு போராட்டம் செஞ்சாரு. அதுக்கப்புறம், ரோடு வசதியில்லாத காலம். ரோடு போடச் சொல்லி அரசுக்கு எதிரா போராட்டம் செஞ்சாரு. ஊர் மக்கள திரட்டி, சசியே முன்ன நின்னு கைவேலையாவே ரோடு போட்டார். இடங்கணசாலையில் இருந்து கே.ஆர்.தொப்பூர் வரைக் கும் ரோடு போடச் சொல்லி, டேங்க் மேலே ஏறி நின்னு தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

சின்ன சின்ன பசங்க மது குடிக்கறதும், பள்ளிக்கூடம், கோயில் பக்கத்துல இருக்கற மதுக்கடையால மக்கள் பாதிக்கப்படுறதையும் தடுக்க பூரண மதுவிலக்கு அவசியம்னு, இந்த போராட்டத்தை கையில எடுத்து ஊர் ஊரா உண்ணா விரதம் இருந்து வந்தார்.

டெல்லி வரைக்கும் போயி போராட்டம் செஞ்சப்ப எல்லாம் கைது பண்ணுவாங்க, அப்புறம் விட்டுடுவாங்க. ஆனா, நேற்று டவர் மேலே இருந்த சசிபெருமாளை, எப்படி கீழே கொண்டு வந்தாங்கன்னு தெரியல, அவரு எதனால இறந்தார்னும் மர்மமா இருக்கு” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x