Published : 04 Feb 2020 09:41 AM
Last Updated : 04 Feb 2020 09:41 AM
ஸ்ரீபெரும்புதூர் - முடிச்சூர் சாலை 4 வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால், சாலையோரம் உள்ள மிகவும் பழமையான புளிய மரங்கள் அகற்றப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீபெரும்புதூர் - முடிச்சூர் சாலை 12 கிமீ நீளம் கொண்டது. வாகனப் போக்குவரத்து நாளுக்குநாள் அதிகரித்துவரும் இந்த 2 வழிப்பாதையை, 4 வழிப்பாதையாக மாற்ற நெடுஞ்சாலைத் துறையினர் திட்டமிட்டுள்ளனர். முதற்கட்டமாக, ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பிள்ளைப்பாக்கம் வரை 3.5 கிமீ தொலைவுக்கு 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் முடிக்கப்பட்டன.
தற்போது 2-ம் கட்டமாக, மீதம் உள்ள 8.4 கிமீ தொலைவு சாலை விரிவாக்கத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதனால், இந்தச் சாலையில் நாவலூர் முதல் மணிமங்கலம் வரை, இருபுறத்திலும் உள்ள 100-க்கும் மேற்பட்ட பழமையான புளிய மரங்கள் அகற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் கே.முகம்மது கனி கூறியதாவது:
சாலை விரிவாக்கம், குடியிருப்பு விரிவாக்கம், மரங்கள் வெட்டிக் கடத்தல் போன்ற காரணங்களால் மரங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன. இதனால், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளது. நிழலுக்கு ஒதுங்குவதற்கு கூட மரங்களை தேட வேண்டிய நிலை உள்ளது.
சாலை விரிவாக்கத்துக்காக அகற்றப்பட உள்ள மரங்கள், 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்ணுக்கு அழகாக, இயற்கை ததும்பும் வண்ணம் அமைந்துள்ள இந்த புளிய மரங்களின் இடையே பயணம் செய்வது அலாதியாக இருக்கும். மரங்களை அகற்றாமல், அருகே உள்ள நிலங்களை கையகப்படுத்தி, சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும். மேலும், அதிக அளவில் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்க வேண்டிய கடமை எல்லோருக்கும் உள்ளது. வருங்கால சந்ததியினர் நலமோடு வாழ நம்மால் முடிந்த அளவுக்கு மரங்களை வளர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலைத் துறை பொறியாளர் ஒருவர் கூறியதாவது: ஸ்ரீபெரும்புதூர் - முடிச்சூர் சாலை ரூ.75 கோடி செலவில், 4 வழிச்சாலையாக விரிவுபடுத்த திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
புளிய மரங்களை பிடுங்கி, வேறு இடத்தில் நட்டால், அவை வளர்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பில்லை. இதற்கு மாற்றாக விரிவாக்கப் பணிகள் முடிந்தவுடன், சாலையோரங்களில் அகற்றப்படும் மரங்களுக்கு ஈடாக, புதிதாக மரக்கன்றுகள் நட்டு வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT