Published : 03 Feb 2020 06:32 PM
Last Updated : 03 Feb 2020 06:32 PM
மதுரை மாநகராட்சியில் உயர்த்தப்பட்ட சொத்துவரி வாபஸ் பெறப்பட்டும், பழைய சொத்து வரி, மற்ற வரிகளை கட்டும் ஆர்வம் பொதுமக்களிடம் இல்லாததால் ரூ.113 கோடி வரிபாக்கி நிலுவையில் உள்ளது. இந்த வரியை கட்டாமல் ஏமாற்றுவோருக்கு மாநகராட்சி ‘நோட்டீஸ்’ வழங்கி வருகிறது.
மதுரை மாநகராட்சிக்கு குடிநீர் வரி, சொத்து வரி, பாதாளசாக்கடை வரி, காலி மனைவரி, கடைகள் வாடகை, குப்பை வரி மற்றும் தொழில் வரி ஆகிய 7 வருவாய் இனங்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.207 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.
இதில், சொத்து வரி மட்டும் ரூ.97 கோடி. கடந்த 2017ம் ஆண்டு தமிழக அரசு, சொத்து வரியை அதிகரித்தது. இந்த வரி உயர்வால், மாநகராட்சிக்கு சொத்து வரி மட்டுமே ரூ.97 கோடியிலிருந்து ரூ.210 கோடியாக உயர்ந்தது.
இதற்கு பொதுமக்கள், தொழில் அதிபர்கள், வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். சொத்து வரியை குறைக்கும் வரை, பழைய வரியைக் கூட அவர்கள் கட்டவில்லை. அதனால், மாநகராட்சி வழக்கமாக வசூலாக வேண்டிய வரி கூட வரவில்லை. வசூலான வரி, ஊழியர்களுக்கு ஊதியத்திற்கு மட்டுமே செலவிடப்பட்டது.
மாநகராட்சிக்கு மற்ற வருவாய் இனங்களை விட சொத்து வரியே பிரதானமான வருவாய் என்பதால் வருவாய் இல்லாமல் மாநகராட்சி நிதிநெருக்கடியில் தவித்தது. பொதுமக்களுக்கான அடிப்படை வசதிகள், வளர்ச்சத்திட்டப்பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அனைத்திற்கும் மத்திய, மாநில அரசுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டியது உள்ளது. சமீபத்தில் தமிழக அரசு, வரி உயர்வை வாபஸ் பெற்று பழைய வரியையே வசூல் செய்ய உத்தரவிட்டது. புதிய வரியை கட்டியவர்களுக்கு, அடுத்த காலாண்டு வரியில் அதை சரி செய்வதற்கு மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஆனாலும், பழைய வரியை கூட இன்னும் பெரும்பாலானோர் கட்டாமல் மாநகராட்சியை ஏமாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது பழைய வரியை பாக்கி வைத்துள்ளவர்களுக்கும், வரைபடத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கட்டிடம் கட்டி அபராதம் மற்றும் புதிய வரி நிர்ணயம் செய்து கட்டாமல் இருப்பவர்களுக்கும் மாநகராட்சி ‘நோட்டீஸ்’ அனுப்பியுள்ளது. வரும் மார்ச்சிற்குள் இந்த வரியை கட்டாதவர்கள் மீதும், நிர்ணயிக்கப்பட்ட வரிவசூலை எட்டாத பில் கலெக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் மாநகராட்சி ஆணையாளர் ச.விசாகன் முடிவு செய்துள்ளார்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: வரி உயர்த்தியப்பிறகு அதை வசூல் செய்வதில் தமிழக அரசே ஒரு நிலையான முடிவுக்கு வராததால் பொதுமக்களுக்கு நெருக்கடி கொடுத்து மாநகராட்சி பழைய வரியை கூட வசூல் செய்ய முடியவில்லை.
பழைய சொத்து வரி, மற்ற வருவாய் இனங்கள் ரூ.207 கோடியில் தற்போது வரை ரூ.94 கோடி வரை மட்டுமே வசூலாகியுள்ளது. மீதி 113 கோடி வரிபாக்கி உள்ளது. இந்த தொயை வரும் மார்ச் மாதத்திற்குள் வசூல் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பொதுமக்களிடம் மாநகராட்சி ரூ.40 கோடி டன்
வரி உயர்த்திய பிறகு அந்த வரியைக் கூட பொதுமக்கள் ரூ.40 கோடி வரை கட்டியுள்ளனர். தற்போது அந்த வரியை, மாநகராட்சி கட்டிய பொதுமக்களுக்கு திருப்பபி செலுத்த வேண்டிய உள்ளது. ஆனால், தற்போதுள்ள நிதி நெருக்கடியால் மாநகராட்சி இந்தத் தொகையை பொதுமக்களுக்கு திருப்பி செலுத்த முடியவில்லை. அதனால், அவர்கள் கணக்கிலேயே அடுத்தடுத்த காலாண்டு சொத்துவரியை வரவு செய்து நேர் செய்ய மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
புதிய வரி அடிப்படையில் மாநகராட்சி வரிவசூல் செய்திருந்தால் மாநகராட்சிக்கு சொத்து வரி மட்டுமே ரூ.210 கோடி கிடைத்து இருக்கும். ஆனால், தற்போது பழைய வரியையே வசூல் செய்ய வேண்டிய உள்ளதால் மாநகராட்சிக்கு சொத்து வரி கூடுதலாக கிடைப்பதில் இழப்பு ஏற்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT