Last Updated : 02 Feb, 2020 07:19 AM

1  

Published : 02 Feb 2020 07:19 AM
Last Updated : 02 Feb 2020 07:19 AM

பட்ஜெட் 2020: ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்

தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் உட்பட இந்திய அளவில் 5 தொல்லியல் பகுதிகளில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது மத்திய பொது பட்ஜெட் உரையில் வெளியிட்டார்.

நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க பல்வேறு இடங்களில் ஆங்கிலேயர் காலம் முதல் தொல்லியல் அகழ்வாய்வுகள் நடைபெறுகின்றன. இங்கு கிடைக்கும் தொல்லியல் பொருட்களின் முக்கியத்துவத்தை பொருத்து அங்கு அருங்காட்சியகங்கள் அமைக்கப்படுகின்றன.

இந்திய தொல்லியல் ஆய்வுத்துறையின் சார்பில் அமைக்கப்படும் இவற்றை தொல்லியல் ஆய்வுகளின் அருங்காட்சியகங்கள் என அழைக்கின்றனர். இவற்றை பொதுமக்கள் கண்டு தம் வரலாற்று முக்கியத்துவத்தை அறிந்துகொள்கின்றனர். இந்தவகையில், நேற்று மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பொதுபட்ஜெட்டில் மேலும் ஐந்து இடங்களில் தொல்லியல் ஆய்வுகளின் அருங்காட்சியகங்கள் அமைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தனது பட்ஜெட் உரையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ‘‘இந்தியாவின் சுற்றுலாத்துறையை வளர்க்கும் பொருட்டு நாட்டின் மேலும் ஐந்து இடங்களில் மத்திய அரசால் தேசிய அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளன. இவை ஹரியானாவின் ராக்கிகர், உத்திரபிரதேசத்தின் அஸ்தினாபூர், அசாமின் ஷிவ்சாகர், குஜராத்தின் தோலாவிரா மற்றும் தமிழகத்தின் ஆதிச்சநல்லூர் ஆகிய இடங்களில் அமைய உள்ளன’’ எனத் தெரிவித்தார்.

கடந்த 1905-ம் ஆண்டு ஆங்கிலேயரால் தொல்லியல் ஆய்வு ஆதிச்சநல்லூரில் துவங்கியது. அதன் பிறகு இந்திய தொல்லியல் ஆய்வகத்தினராலும் ஆய்வுகள் நடைபெற்றன. எனினும், இதன் ஆய்வு முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த சூழலில் அங்கு மத்திய அரசால் அமைக்கப்பட உள்ள தொல்லியல் ஆய்வுஅருங்காட்சியகத்தால் தமிழர் நாகரீகம் பரவும் வாய்ப்புகள் இருப்பதாகக் கருதப்படுகிறது. இதேபோன்ற ஒரு அருங்காட்சியகம் பல ஆண்டுகளுக்கு முன் தஞ்சாவூரின் காவிரிப்புகும்பட்டினத்தில் அமைக்கப்பட்டது. தற்போது ஆதிச்சநல்லூரில் அமைக்கப்பட உள்ளது தமிழகத்தின் இரண்டாவது அருங்காட்சியகம் ஆகும்.

இத்துடன் அறிவிக்கப்பட்டுள்ள ராக்கிகர், குஜராத்தின் தோலாவிரா ஆகியவை சிந்துசமவெளி நாகரீகத்தின் ஹரப்பா பகுதிகள் ஆகும்.

அசாமின் ஷிவ்சாகரில் பழங்காலக் கோயில்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. உத்தரபிரதேசத்தின் அஸ்தினாபுரத்தில் மகாபாரதம் நடைபெற்றதற்கான தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்று அதன் மீதான பல சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இனி இந்தஐந்து இடங்களிலும் அப்பகுதிகளின் கண்டுபிடிப்புகள் பொதுமக்களின் பார்வைக்கு வர உள்ளன.

மத்திய கலாச்சாரத்துறைக்கு ரூ.3,150 கோடி ஒதுக்கிய நிதியமைச்சர் நிர்மலா, அதன் கீழ் மற்றொரு புதிய அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதில் நாட்டின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரங்களை பாதுகாக்க வேண்டிபுதிதாக ஒரு மத்திய நிறுவனம் அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது பட்ஜெட் உரையில் அமைச்சர் நிர்மலா கூறும்போது, ‘‘நாட்டில் தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான துறைகளில் திறன்வாய்ந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளதால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுகிறது. தற்போது அமைக்கப்பட உள்ள புதிய நிறுவனம், முதல் கட்டமாக தன்னாட்சி அமைப்பாக செயல்படும்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x