Published : 01 Feb 2020 09:44 AM
Last Updated : 01 Feb 2020 09:44 AM
எவ்வித முறைகேடுகளுக்கும் துணை போகக்கூடாது, சட்டவிரோதச் செயல் மற்றும் ஊழலுக்கு இடம் கொடுத்துவிடக்கூடாது என திமுக உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.
ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பங்கேற்ற மாநாடு திருச்சி கேர் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு வரவேற்றார்.
மாநாட்டில் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சிதான் வெற்றிபெறுவது வழக்கம். ஆனால் இந்தமுறை எதிர்க்கட்சியான திமுகஆளுங்கட்சியைவிட அதிகமான இடங்களில் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது. இது ஆளுங்கட்சி மீதான எதிர்ப்பால் மட்டுமல்ல. மக்கள் நம் மீது கொண்டுள்ள நம்பிக்கையையும் காட்டுகிறது.
தேர்ந்தெடுத்த மக்கள், தாங்கள் தவறு செய்துவிட்டோம் எனநினைக்காத வகையிலும், வாக்களிக்காத மக்கள் இவருக்குவாக்களிக்காமல் இருந்துவிட்டோமே என வருந்தும் வகையிலும் உங்களின் பணி சிறப்பாக இருக்க வேண்டும். மக்கள் தெரிவிக்கும் குறைகளை காது கொடுத்து கேட்கவேண்டும். எதிர்க்கட்சியாக இருப்பதால் எல்லாவற்றையும் உடனடியாக செய்துவிட முடியாது.
இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்ய வேண்டும். பெண்கள் பாதுகாப்பு, குடிநீர், தூய்மை, கழிப்பிடவசதி, சாக்கடை வசதி, தெருவிளக்கு, சாலை வசதி, நீர்நிலைகள் மேம்பாடு, சுற்றுப்புறச் சூழல்போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். நூலகங்களை புனரமைத்து அதிக வாசகர்களை வருமாறு செய்ய வேண்டும்.
சாலை சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தாங்கள் வெற்றி பெற்ற பகுதிக்கு நன்மையைச் செய்தால், அதை திமுகவின் கோட்டையாக மாற்றிவிட முடியும்.
திமுகவினர் வெற்றி பெற்ற பகுதிகளுக்கு உரிய நிதியை அளிக்கமாட்டோம் என சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கருப்பண்ணன் கூறியுள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சட்டப்பேரவையில் மட்டுமல்ல, மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் முறையிடுவோம்.
பெரும்பாலும் டெண்டர் விடுவதில்தான் நமக்கு அதிக கெட்ட பெயர் என வரும். எனவே இதில் முழு கவனம் செலுத்த வேண்டும். நிர்வாகத்தில் நடைபெறக்கூடிய முறைகேடுகளை உடனுக்குடன் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும். சட்டவிரோதச் செயல்களுக்கும், ஊழலுக்கும் இடம்கொடுத்துவிடக்கூடாது. எவ்விதமுறைகேடுகளுக்கும் துணைபோகக்கூடாது. வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT