Published : 31 Jan 2020 09:50 AM
Last Updated : 31 Jan 2020 09:50 AM
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 3 இடங்களில் ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிக்கான மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.
கடந்த 11-ம் தேதி நடைபெற்ற ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணை தலைவர்களுக்கான மறைமுகத் தேர்தலில் திருவள்ளூர், பூந்தமல்லி, சோழவரம், புழல், வில்லிவாக்கம், மீஞ்சூர் ஆகிய 6 ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் பதவிகளை திமுகவும், எல்லாபுரம், கடம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, பூண்டி ஆகிய 4 ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிகளை அதிமுகவும் கைப்பற்றின.
அதேபோல் சோழவரம், திருவள்ளூர், பூந்தமல்லி, மீஞ்சூர், புழல், கும்மிடிப்பூண்டி, கடம்பத்தூர் ஆகிய 7 ஊராட்சி ஒன்றியக் குழுதுணை தலைவர் பதவிகளை திமுகவும், எல்லாபுரம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவியை அதிமுகவும், வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவர் பதவியை பாமகவும் கைப்பற்றின.
திருத்தணி, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு, ஆர்.கே.பேட்டை ஆகிய 4 ஊராட்சி ஒன்றியங்களில், தேர்தல் நடத்துவதற்கு தேவையான உறுப்பினர்கள் இல்லாததால், மறைமுகத் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. பூண்டி ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவருக்கான தேர்தலும், போதிய உறுப்பினர்கள் இல்லாததால் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில் மறைமுகத் தேர்தல் தள்ளி வைக்கப்பட்ட ஊராட்சிஒன்றியங்களில் நேற்று மறைமுகத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், ஆர்.கே.பேட்டையில் தேர்தல் நடத்துவதற்கு தேவையான உறுப்பினர்கள் இல்லாததாலும், பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்தில் துணைத் தலைவர் தேர்தல் நடத்துவதற்கு தேவையான உறுப்பினர்கள் இல்லாததாலும் மறைமுகத் தேர்தல் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டது.
ஆகவே, 3 ஊராட்சி ஒன்றியங்களில் மட்டும் நேற்று காலை நடைபெற்ற மறைமுகத் தேர்தலில் பள்ளிப்பட்டு, திருவாலங்காடு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர்களாக அதிமுகவைச் சேர்ந்த பி.ஜான்சிராணி, வி.ஜீவா (இவர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ. அரியின் சகோதரரும், தமிழ்வளர்ச்சித் துறை இயக்குநருமான கோ. விசயராகவனின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். திருத்தணி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவராக சுயேச்சை வேட்பாளர் டி.தங்கதனம் ஆகியோர் தேர்வுசெய்யப்பட்டனர். இதில், பி.ஜான்சிராணியும், டி. தங்கதனமும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று மாலை 3 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற ஊராட்சிஒன்றியக் குழு துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தலில், பூண்டி, திருவாலங்காடில் திமுகவைச் சேர்ந்த எம். மகாலட்சுமி, எம். சுஜாதா, திருத்தணியில் அதிமுகவைச் சேர்ந்த ஏ.ரவி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் ஏ.ரவி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT