Published : 29 Jan 2020 05:08 PM
Last Updated : 29 Jan 2020 05:08 PM
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியை மாற்றும் வரை போராட்டம் தொடரும் என, காங்கிரஸில் இருந்து தற்காலிக நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ தனவேலு தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநில பாகூர் தொகுதி காங்கிரஸ் கட்சி எம்எல்ஏவான தனவேலு கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்து இல்லை எனப் போராட்டம் நடத்தினார். தொடர்ந்து முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்தார். இது தொடர்பாக ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்தும் புகார் அளித்தார்.
இதனிடையே கட்சி கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதால் காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக புதுச்சேரி காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான நமச்சிவாயம் அறிவித்தார். இதையடுத்து தன்னைக் கட்சியிலிருந்து நீக்க மாநிலத் தலைவருக்கு அதிகாரமில்லை என தனவேலு எம்எல்ஏ தெரிவித்தார்.
தொடர்ந்து, தனவேலு மகன் அசோக் ஷின்டேவும் காங்கிரஸ் கட்சியிலிருந்து தற்காலிமாக நீக்கப்பட்டார். முதல்வர், அமைச்சர்களின் ஊழலை ஆதாரத்துடன் வெளிப்படுத்துவேன் எனவும், மக்களைத் திரட்டி ஊர்வலமாகச் சென்று ஆளுநரிடம் புகார் அளிப்பேன் என்றும் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்று (ஜன.29) தனவேலு எம்எல்ஏ தனது தொகுதி மக்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோருடன் ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக வந்தார். சுதேசி மில் அருகில் புறப்பட்ட ஊர்வலம் அண்ணா சாலை, நேரு வீதி வழியாக வந்து தலைமை தபால் நிலையம் அருகில் நிறைவடைந்தது.
அங்கு தனவேலு எம்எல்ஏ பேசும்போது, "பாகூர் தொகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உயிர் காக்கும் மருந்துகள் இல்லை. ஆம்புலன்ஸுக்கு டீசல் இல்லை என்று கேட்டுப் போராட்டம் நடத்தினேன். என்னுடைய தொகுதிக்காகவும், புதுச்சேரி மக்களுக்காகவும் சட்டப்பேரவையில் குரல் கொடுத்தேன்.
ஆளுங்கட்சியில் இருந்துகொண்டு இதையெல்லாம் ஏன் கேட்கிறாய்? இந்த அரசு என்ன செய்கிறதோ அதுதான் மக்களுக்கு என்கின்றனர். அரசு சார்பு நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு வருகின்றன. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் இல்லை. மாறாக, முதல்வர், அமைச்சர்கள் தங்களுடைய சொத்துகளை மட்டும் உயர்த்தி கொண்டே செல்கின்றனர்.
அனைத்துத் துறைகளிலும் கொள்ளை நடக்கிறது. மக்கள் மீது அக்கறை இல்லை. இதையெல்லாம் தட்டிக் கேட்டதால் என்னைக் கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். இதனை நான் வரவேற்கிறேன். என்னைக் கட்சியிலிருந்து நீக்கி விடலாம். ஆனால் பதவியிலிருந்து நீக்க முடியுமா? எனது தொகுதி மக்களால் மட்டுமே நான் நிராகரிக்கப்பட வேண்டும்’’ என்றார்.
தொடர்ந்து, அங்கிருந்து தனவேலு எம்எல்ஏ தனது ஆதரவாளர் சிலருடன், ஆளுநர் மாளிகை சென்றார். அங்கு ஆளுநர் கிரண்பேடியைச் சந்தித்து முதல்வர், அமைச்சர்கள் குறித்த ஊழல் பட்டியலை ஆதாரத்துடன் அளித்தார். இந்தச் சந்திப்பு சுமார் 25 நிமிடங்களுக்கு மேல் நடந்தது.
அதன் பின்னர், ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியே வந்த தனவேலு எம்எல்ஏ செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘முதல்வர், அவரது மகன், மாமனார், 3 அமைச்சர்கள், சபாநாயகர் ஆகியோர் செய்த நில மோசடி முறைகேடு குறித்து உரிய ஆதாரத்துடன் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளேன். அதனைப் பெற்றுக்கொண்ட ஆளுநர் அதுகுறித்த உண்மைத் தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். இந்த ஊழல் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் சிபிஐயிடம் ஆதாரத்துடன் அளிப்பேன். முதல்வர் நாராயணசாமியை மாற்ற வேண்டும். அவரை மாற்றும் வரை என்னுடைய போராட்டம் தொடரும்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT