Published : 29 Jan 2020 03:50 PM
Last Updated : 29 Jan 2020 03:50 PM
நெல்லையில் மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 6 கடைகளைத் தவிர்த்து மற்ற அனைத்து கடைகளிலும், தூத்துக்குடியில் 100 % கடைகளிலும் பிப். 1 முதல் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இதனை உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் அதிகாரி சஜ்ஜன் சிங் சவான் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியருமான ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் அறிவித்தனர். மேலும், இத்திட்டத்திற்காக 5 சதவிகித பொருட்கள் கூடுதலாக அனைத்துக் கடைகளிலும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என்றும் அவர்கள் கூறினர்.
தமிழ்நாட்டில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு எந்த நியாய விலைக் கடைகளிலும் பொருட்கள் பெற்றுக்கொள்ள ஏதுவாக உள் மாநிலப் பெயருடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக முன்னேற்பாடு கூட்டம் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் தூத்துக்குடி மாவட்ட கூடுதல் ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர், அப்போது நெல்லை தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டம் பிப். 1 முதல் அனைத்து கடைகளிலும் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் 4, 78, 206 கார்டுகளும், 789 ரேசன் கடைகளும் உள்ளன. அதே போல தூத்துக்குடி மாவட்டத்தில் 4,93,842 கார்டுகளும், 957 கடைகளும் உள்ளது.
ஒட்டு மொத்தமாக தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 233 ரேசன் கடைகள் உள்ளது என்றனர். ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் இரண்டு மாவட்டங்களிலும் கூடுதலாக 5 சதவிகித பொருட்கள் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும் இத்திட்டத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவிகித கடைகளும் நெல்லை மாவட்டத்தில் மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 6 கடைகளை தவிர்த்து மற்ற கடைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஒரே வருவாய் கிராமத்தில் உள்ள ரேசன் கார்டை பயன்படுத்தி அதே கிராமத்தில் உள்ள மற்ற கடைகளில் வாங்க முடியாது. தற்போது சோதனை முயற்சியாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மட்டுமே உள்ள கடைகளில் வாங்கிக் கொள்ளலாம்.
இத்திட்டம் முழுமையாக அமல்படுத்திய பின் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கடைகளிலும் வாங்கிக் கொள்ளலாம், ரேசன் கடைகள் மண்ணெண்ணெய் தவிர்த்து அனைத்துப் பொருட்களும் தேவையான அளவு இருப்பு இருப்பதை தினமும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உறுதி செய்வார்கள் என்று தெரிவித்தனர்.
மேலும் ஆன்லைன் முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதனால் அதில் உள்ள நெட்வொர்க் உள்ளிட்ட கணினி பிரச்சினைகளை சரிசெய்ய தாலுகா வாரியாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர் எனவும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT