Published : 28 Jan 2020 06:04 PM
Last Updated : 28 Jan 2020 06:04 PM
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ‘கரோனா’ வைரஸ் அறிகுறியுடன் யாரும் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க, தனி சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு இன்று முதல் தயார்நிலையில் உள்ளது. இதேபோல், அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளிலும் இந்த சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
சீனாவின் ஹூபெய் மகாணத்தில் ‘கரோனா’ வைரஸ் தாக்கத்தால் அங்குள்ள மக்கள் அடுத்தடுத்து பலியாகி வருகின்றனர். இந்த வைரஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால் உலக நாடுகள் சீனாவில் இருந்து தங்கள் நாடுகளுக்கு வருவோரை கண்காணித்து அவர்களை பரிசோதனை செய்து அறிகுறி தென்பட்டாலே அவர்களை உடனடியாக தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கின்றன.
இந்தியாவிலும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும், வெளியுறவுத்துறை அமைச்சகமும் இணைந்து, சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளது.
சீனாவில் இருந்து இந்தியா திரும்புவோரை கண்காணித்து அவர்களையும் பரிசோதனை செய்ய நாடு முழுவதும் சுகாதாரத்துறை உஷார்ப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று ஜெய்பூரில் ஓர் இளைஞர், ‘கரோனா’ வைரஸ் அறிகுறியுடன் இருந்ததால் ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை உடனடியாக அவரைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகிறது. ஆனால், அவருக்கு கரோனா’ வைரஸ் இருக்கிறதா? என்பதை சுகாதாரத்துறை உறுதிப்படுத்தவில்லை.
இந்நிலையில், சீனா சென்று இன்று தாயகம் திரும்பிய சண்டிகரைச் சேர்ந்த ஒருவருக்கு காரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதால் அவர் அங்குள்ள அரசு மருத்துமவனை தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் ‘கரோனா’ வைரஸ் அறிகுறியுடன் யாரேனும் சீனாவில் இருந்து வந்தால் அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க அனைத்து அரசு மருத்துவக்கல்லூரிகளிலும் தனி சிறப்பு வார்டுகள் அமைக்க சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, இன்று மதுரை அரசு மருத்துவமனையில் ‘கரோனா’ வைரஸ் தனி சிறப்பு வார்டு உருவாக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. அதில், 2 நுரையீரல் சிகிச்சைப்பிரிவு மருத்துவர்கள் மற்றும் இந்தத் துறையைச் சேர்ந்த 2 பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள், 2 பொதுமருத்துவத்துறை மருத்துவர்கள் மற்றும் அந்தத் துறையை சேர்ந்த 2 பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவர்கள் மற்றும் செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அடங்கிய மருத்துவக் குழுவினர், அந்த சிறப்பு வார்டில் ‘கரோனா’ வைரஸ் அறிகுறியுடன் யாரும் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தயார்நிலையில் உள்ளனர்.
இதேபோல், தமிழகம் முழுவதம் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் ‘கரோனா’ தனி சிறப்பு வார்டுகள் அமைக்கபட்டு வருகின்றன.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சீனாவில் இருந்து வருகிறவர்களை, விமானநிலையத்தில் இருந்தே கண்காணிக்கிறோம். இதுவரை யாருக்கும், ‘கரோனா’ வைரஸ் அறிகுறி கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனாலும், சிறப்பு வார்டும், சிறப்பு மருத்துவக்குழுவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தயாராக வைத்துள்ளோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT