Published : 28 Jan 2020 05:36 PM
Last Updated : 28 Jan 2020 05:36 PM
முல்லைப்பெரியாறு அணையில் மத்திய அரசின் மூவர் கண்காணிப்புக் குழு இன்று ஆய்வு மேற்கொண்டது.
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் நீராதாரமாக முல்லைப் பெரியாறு அணை இருந்து வருகிறது. அணையில் 152அடி உயரத்திற்கு நீரை உயர்த்துவதற்கான கட்டமைப்பு பலமாக உள்ளது. இருப்பினும் அணையின் நீர்மட்டத்தை உயர்த்தாமல் கேரள அரசு தாமதம் செய்து கொண்டே வந்தது.
இதனைத் தொடர்ந்து 2014-ல் உச்சநீதிமன்றம், அணையின் நீர்மட்டத்தை 142 அடி வரை உயர்த்திக் கொள்ள அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியது. மேலும் பேபி அணையைப் பலப்படுத்தி 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டது. இதற்காக மூவர் கண்காணிப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது.
இக்குழு அணையின் நீர்மட்டம் அதிகரிக்கும் போதும், குறையும் போதும் ஆண்டிற்கு ஒருமுறை அணையை ஆய்வு செய்வது வழக்கம். இதில் அணையின் உறுதித்தன்மை, பேபி அணையைப் பலப்படுத்துதல், வல்லக்கடவு பாதையை சீரமைத்தல் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அதற்கான பணிகளை மேற்கொள்ளும்.
தற்போது இக்குழுவின் தலைவராக மத்திய நீர்வள ஆணைய தலைமைப் பொறியாளர் குல்ஷன்ராஜ் உள்ளார்.
தமிழக பிரதிநிதியாக தமிழக அரசின் பொதுப்பணித்துறை செயலர் மணிவாசன், கேரள பிரதிநிதியாக கேரள நீர்வள ஆதார அமைப்பின் செயலர் அசோக் ஆகியோர் உள்ளனர்.
கடந்த ஆண்டு ஜூன் 4-ம் தேதி இக்குழு பெரியாறு அணையை ஆய்வு செய்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 118 அடியாக குறைந்துள்ள நிலையில் மூவர் குழு இன்று அணைப்பகுதியை ஆய்வு செய்தது. இதில் அணைப்பகுதியில் செய்ய வேண்டிய மராமத்துப் பணிகள், அணையின் நீர்மட்டத்திற்கு ஏற்ப நீர்க்கசிவு உள்ளதா என்பதை ஆய்வு செய்தனர். மேலும் பெரியாறு அணைக்கும், பேபிஅணைக்கும் இடையில் நடைபெறும் சாலைப்பணி ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.
பின்பு ஹைட்ராலிக் முறையில் இயங்கும் 2-வது மதகையும், கையால் இயக்கப்படும் 4-வது மதகையும் இயக்கி அதன் செயல்பாட்டை சரிபார்த்தனர்.
காவிரி தொழில்நுட்பக்குழுத் தலைவர் சுப்ரமணி, பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இர்வின் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வினைத் தொடர்ந்து குமுளியில் உள்ள பெரியாறு அணை கட்டுப்பாடு அலுவலகத்தில் மூவர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT