Published : 28 Jan 2020 01:12 PM
Last Updated : 28 Jan 2020 01:12 PM
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் நடத்தப்படும் என உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
அதனை பிரமாணப்பத்திரமாக தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சை நாம்தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்நாதன், ராமநாதபுரத்தச் சேர்ந்த திருமுருகன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தனர்.
அதில்," தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற சைவ வழிபாட்டுத் தலம். யுனெஸ்கோவால் பாதுகாக்கப்பட வேண்டிய பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பின்னர் வரும் பிப்ரவரி 5-ல் நடைபெற உள்ளது.
சைவ வழிபாட்டுத் தலங்களில் தமிழ் மறை அடிப்படையிலேயே குடமுழுக்கு நிகழ்வினை நடத்த வேண்டும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக விழுப்புரம் சுந்தரர் கோயில் குடமுழுக்கு விழா தொடர்பான வழக்கில், குடமுழுக்கு விழாவை தமிழில், தமிழ் மறைகளை ஓதி நடத்துமாறு தனி நீதிபதி உத்தரவிட்டார்.
தஞ்சை பெரிய கோயில் தமிழர்களின் தனி அடையாளம். ஆகவே, தஞ்சை பெரிய கோயிலின் குடமுழுக்கு விழாவை தமிழில், தமிழ் சைவ ஆகமங்களான தேவாரம், திருவாசகம் ஆகியவற்றை ஓதி நடத்த உத்தரவிட வேண்டும்" எனக் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசுவாமி, ரவீந்திரன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து சமய அறநிலையத்துறை தரப்பில் தமிழ் மொழிக்கும் சம்ஸ்கிருத மொழிக்கும் சமமான மதிப்பே வழங்கப்படுகிறது.
குடமுழுக்கு விழாவை தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தனர். அதனை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT