Published : 28 Jan 2020 08:07 AM
Last Updated : 28 Jan 2020 08:07 AM

கோவை சிங்காநல்லூர் அருகே துணிகரம்: தொழிலதிபர் வீட்டில் 100 பவுன், ரூ.10 லட்சம் கொள்ளை

கோவை மசக்காளிபாளையத்தில் திருட்டு சம்பவம் நடந்த தொழிலதிபரின் வீடு. படம்: ஜெ.மனோகரன்

கோவை

கோவையில் தொழிலதிபர் வீட்டுக் கதவை உடைத்து 100 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள மசக்காளிபாளையம் பெரியார் நகர் கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் ஆதம்ஷா(60). பைண்டிங் இயந்திரம் தயாரிக்கும் தொழில் செய்து வருகிறார். ஆதம்ஷாவுக்கு மனைவி, 2 மகன், ஒரு மகள் உள்ளனர். தரைத்தளம் மற்றும் முதல் தளம் கொண்ட தனி வீட்டில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ஆதம்ஷா குடும்பத்துடன் கடந்த 24-ம் தேதி மதியம் வீட்டைப் பூட்டிவிட்டு தூத்துக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார். நிகழ்ச்சி முடிந்த பின்னர், நேற்று முன்தினம் இரவு கோவைக்கு திரும்பினார். வீட்டுக்கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது, பொருட்கள் கலைந்து கிடந்ததையும், வீட்டின் பக்கவாட்டுக் கதவு உடைக்கப்பட்டிருந்ததையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

4 அறைகளும் திறந்து கிடந்தன. தரைத்தளத்தில் உள்ள அறையின் லாக்கர் திறக்கப்பட்டு, அதிலிருந்த 100 பவுன் நகை, ரூ.10 லட்சம் தொகை மாயமாகி இருந்தது. இதுகுறித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்துக்கு ஆதம்ஷா தகவல் தெரிவித்தார். மாநகர குற்றப்பிரிவு துணை ஆணையர் உமா மற்றும் ஆய்வாளர் சிவக்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணையில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்துக்கு வந்த மோப்ப நாய், வீட்டின் தரைத்தளத்தில் இருந்து மொட்டை மாடி வரை சென்றது. பின்னர், வீட்டுக்கு வெளியே வந்து நின்று விட்டது. கைரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர். இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘சம்பவம் நடந்த பகுதியில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் இல்லை. தரைத்தளத்தில் உள்ள அறையில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்தாலும், மேலும் 4 அறைகளிலும் மர்மநபர்கள் நகை, பணம் உள்ளதா எனத் தேடியுள்ளனர். இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x