Published : 27 Jan 2020 04:16 PM
Last Updated : 27 Jan 2020 04:16 PM
உரிமை மீறல் குழுவில் புதுச்சேரி தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார் இன்று ஆஜரானார். அப்போது கமிட்டி அறைக்கு வெளியே தனியாக நாற்காலியில் சுமார் அரைமணி நேரம் வரை காத்திருந்தார்.
புதுவையில் கடந்த 9 ஆண்டாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. மொத்தமாக இரு முறை மட்டுமே நடந்துள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையரும் நியமிக்கப்படாமல் இருந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் மாநில தேர்தல் ஆணையரை நியமித்து அதற்கான நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தது.
அரசு மாநில தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய முடிவு செய்தது. ஆனால், துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தலையிட்டு உள்ளாட்சித் துறை மூலம் தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இதனையடுத்து அமைச்சரவை கூடி ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணனை தேர்தல் ஆணையராக பரிந்துரை செய்தது. இதற்கு சட்டப்பேரவையும் ஒப்புதல் அளித்து புதிய தேர்தல் ஆணையராக பாலகிருஷ்ணன் நியமிக்கப்படடார். உள்ளாட்சித் துறை அறிவிப்பும் ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து ஆளுநர் கிரண்பேடி புகாரின் பேரில் மத்திய உள்துறை அமைச்சகம் மாநில தேர்தல் ஆணையாளரை தேர்வு செய்வதற்கான விதிமுறைகளை வெளியிட்டது. ஆனால், நியமிக்கப்பட்ட தேர்தல் ஆணையரை நீக்குவதாக ஏதும் தெரிவிக்கவில்லை.
ஆனால், மத்திய உள்துறை அறிவிப்பின்படி, புதிய தேர்தல் ஆணையரை தேர்வு செய்ய உள்ளாட்சித் துறை மூலம் மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியானது.
இது முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சட்டப்பேரவையில் எடுக்கப்பட்ட முடிவுக்கு எதிராக அரசு அதிகாரிகள் செயல்படுவது உரிமை மீறல் விவகாரம் என கூறி இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க ஜெயமூர்த்தி எம்எல்ஏ சபாநாயகரிடம் புகார் மனு அளித்திருந்தார்
இந்த புகார் உரிமை மீறல் குழு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உரிமை மீறல் குழு தலைவர் துணை சபாநாயகர் பாலன் தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். உள்ளாட்சித் துறை சார்பு செயலர் கிட்டிபலராமன், இயக்குனர் மலர்கண்ணன், செயலாளர் அசோக்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இன்று (ஜன.27) தலைமை செயலர் அஸ்வனி குமார் விசாரணைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்படி அவர் மதியம் சட்டப்பேரவை கமிட்டி அறைக்கு வந்தார். கமிட்டி அறைக்கு வெளியில் உள்ள நாற்காலியில் காத்திருக்கும்படி கூறினர். சுமார் அரைமணி நேரம் வரை தனியாக அவர் அமர்ந்திருந்தார். பிறகு அவர் விசாரைணக்கு அழைக்கப்பட்டார். அங்கு குழு தலைவர் பாலன் மற்றும் உறுப்பினர்கள் விசாரணை நடத்தினர். அவர்களின் கேள்விக்கு தலைமை செயலர் அஸ்வினிகுமார் விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக குழு தரப்பில் விசாரித்தபோது, தலைமைச் செயலாளர் விளக்கம் தந்துள்ளார். கலந்து ஆலோசித்து அடுத்த முடிவு எடுக்கப்படும் என்றனர்.
இதுதொடர்பாக, அரசு வட்டாரங்களில் விசாரித்தபோது, "ஏற்கெனவே கடந்த 2009-ல் புதுச்சேரி தலைமைச் செயலாளர் ராகேஷ் பிகாரி, மக்கள் பிரதிநிதிகளை விமரித்தது தொடர்பாக உரிமைமீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. தற்போதைய நோட்டீஸ் தலைமைச் செயலாளருக்கு எதிராக இரண்டாவது முறையாக அனுப்பியுள்ளனர். தற்போதைய தலைமைச் செயலாளர் அஸ்வனி குமார், டெல்லியில் பொதுப்பணித்துறைச் செயலாளராக இருந்தபோது வாய்க்கால்கள் தூர்வாரும் விவகாரம் தொடர்பாக கெஜ்ரிவால் அரசில் உரிமை மீறல் குழு நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தை நாடி தடையாணை பெற்றிருந்த போது பணிமாற்றம் பெற்று புதுச்சேரிக்கு தலைமைச் செயலாளராக வந்தார். தற்போது அவர் புதுச்சேரியில் உரிமை மீறல் குழுவில் ஆஜராகியுள்ளார்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT