Published : 27 Jan 2020 04:02 PM
Last Updated : 27 Jan 2020 04:02 PM
குடியரசு தினத்தையொட்டி புதுச்சேரி ஆளுநர் மாளிகை தேநீர் விருந்திருந்து முதல்வர், அமைச்சர்கள் வெளிநடப்பை துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விமர்சித்துள்ளார். இந்நிலையில் விதிமுறை மீறி சான்றிதழை ஆளுநர் தந்ததால் தேநீர் விருந்திலிருந்து வெளிநடப்பு செய்ததாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். குடியரசு தினவிழாவில் ஆளுநர் அவமதித்ததாகவும், அவர் மன்னிப்பு கோரவும் நாராயணசாமி வலியுறுத்தியுள்ளார்.
குடியரசு தினவிழாவையொட்டி ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்தும், ஜம்மு - காஷ்மீர், அருணாச்சல பிரதேச கலைஞர்களின் கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் பங்கேற்க முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் ஆளுநர் மாளிகைக்கு வந்திருந்தனர். ஆனால் தேநீர் விருந்தில் பங்கேற்காமலும், அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்காமலும் புறக்கணித்து சென்றனர். இதுதொடர்பாக உடனடியாக கிரண்பேடி கருத்து தெரிவிக்கவில்லை. இன்று (ஜன.27) காலை ஆளுநர் கிரண்பேடி கண்டனம் தெரிவித்து தனது வாட்ஸ் அப்பில் தெரிவித்த கருத்து விவரம்:
"மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் மாநிலத்திலிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றவர்களையும், வெளிமாநில கலைஞர்களையும் எவ்வாறு அவமதித்தார்கள் என்பதை மக்கள் அறிந்துகொள்ள வேண்டும். ஆண்டுதோறும் குடியரசு தின விழாவில் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஆளுநர் மாளிகையில் நடைபெறும். இந்த ஆண்டு புதுவையில் பத்ம விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முனுசாமி, மனோஜ்தாஜ் ஆகியோரை உடனடியாக வாழ்த்தும் வகையில் அவர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பத்ம விருது பெற்றவர்களை முதல்வர் பாராட்டி சால்வை அணிவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் முன்னறிவிப்பின்றி எங்கள் அனுமதியின்றி இதற்கு ஏன் ஏற்பாடு செய்தீர்கள்? என முதல்வர் வாக்குவாதம் செய்தார். மேலும் ஆளுநர் மாளிகை நிகழ்ச்சியிலிருந்து முதல்வர் வெளியேறினார். அவருடன் மற்ற அமைச்சர்களும் வெளியேறினர். வெளிமாநிலத்திலிருந்து வந்திருந்த கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகளையும் அவர்கள் புறக்கணித்தனர். இதன்பின் நானும், தலைமை செயலரும் விருது பெற்றவர்களை பாராட்டி, கலைஞர்களை பாராட்டி வாழ்த்து தெரிவித்தோம்.
ஆளுநர் மாளிகையில் நடைபெறுவது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியல்ல, அரசு நிகழ்ச்சி. நாட்டின் குடியரசு தினத்தையொட்டி நடைபெறும் புனிதமான நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியை புறக்கணித்த மக்கள் பிரதிநிதிகளின் நடத்தைக்கு வருந்துகிறோம். பத்ம விருது பெற்றவர்களை பாராட்ட மறுத்தது அவர்களை அவமதிக்கும் செயலாகும்"
இதைத்தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கேபினட் அறையில் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
"புதுவையில் நடந்த குடியரசு தின விழாவில் ஆளுநர் கிரண்பேடி காவல்துறை, மாணவர்கள் அணிவகுப்பில் கைதூக்கி வணக்கம் தெரிவிக்கவில்லை. இது காவல்துறை, மாணவர்களை அவமதிப்பது மட்டுமல்லாமல் புதுவை மக்களையும் ஆளுநர் அவமதிப்பது போன்றதாகும். விதிமுறைகளின்படி அவர் வணக்கம் செலுத்த வேண்டும் என உள்ளது. ஆளுநர் கிரண்பேடி விதிமுறைகளை மீறி நடந்துள்ளார்.
நேற்று மாலை தேநீர் விருந்துக்கு முதல்வர், அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்களை அழைத்திருந்தார். நானும் அமைச்சர்களும், எம்பியும் சென்றிருந்தோம். நாங்கள் அமர்ந்திருந்தபோது பத்ம விருது பெற்றவர்களை நான் பாராட்டுவேன் என திடீரென அறிவிக்கப்பட்டது. புதுவையை சேர்ந்த 2 பேருக்கு பத்ம விருதுகள் கிடைப்பது மகிழ்ச்சிக்குரியது. அவர்கள் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு தனியாக பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும். குடியரசு தின விழாவோடு நடத்தியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்னிடம் ஏதும் கேட்காமல் இப்படி ஒரு விழா நடப்பது பற்றி தகவல் தராமல் திடீரென என்னை எப்படி கவுரவிக்க சொல்கிறீர்கள்? என கேட்டேன். அதன்பிறகுதான் வெளிநடப்பு செய்தேன்.
மேலும் அங்கு சில அதிகாரிகளுக்கு ஆளுநர் சான்றிதழ் அளித்துள்ளார். தனிப்பட்ட முறையில் கிரண்பேடி யாருக்கு எத்தனை சான்றிதழ் வேண்டுமானாலும் அளிக்கலாம். ஆளுநர் என்ற முறையில் சான்றிதழ் அளிக்க சம்பந்தப்பட்ட துறைக்கு கோப்பு சென்று அத்துறை செயலர், அமைச்சர் ஆகியோரின் அனுமதி பெற்றே சான்றிதழ் அளிக்க முடியும். விதிமுறை இல்லாமல் அளிக்கப்பட்ட சான்றிதழ்களை குப்பை தொட்டியில்தான் போட வேண்டும். அந்த சான்றிதழ்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது.
குடியரசுத் தலைவர், ஆளுநர், துணைநிலை ஆளுநர் யாராக இருந்தாலும் தேநீர் விருந்தை குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்வதற்காக நடத்தப்படுவது சம்பிரதாயம். இந்த சம்பிரதாயத்தை மீறி ஆளுநர் கிரண்பேடி செயல்பட்டுள்ளார். இதனால்தான் வெளிநடப்பு செய்தேன். குடியரசு தின விழாவில் வழங்கப்பட்ட காவல்துறை, ஆசிரியர் விருதுக்கு துறைரீதியாக கோப்பு அனுப்பப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையையும் ஆளுநர் மீறியுள்ளார். தனக்குத்தான் அதிகாரம் உள்ளது என அதிகார துஷ்பிரயோகம் செய்து வருகிறார். இதனால்தான் ஆளுநருக்கு நிர்வாகம் தெரியவில்லை என தொடர்ந்து கூறி வருகிறேன். குடியரசு தின விழா, நேற்று நடந்த நிகழ்வுகளுக்கு ஆளுநர் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று குறிப்பிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT