Published : 27 Jan 2020 08:05 AM
Last Updated : 27 Jan 2020 08:05 AM

‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் நெல்லையில் மகளிர் திருவிழா- பெண்கள் நினைத்தால் மாற்றத்தை ஏற்படுத்தலாம்: மகப்பேறு மருத்துவர் ஆக்னஸ் கருத்து

திருநெல்வேலி வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் ‘இந்து தமிழ்’ நாளிதழ் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில் நடைபெற்ற மகளிர் திருவிழாவில் மகளிர் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் ஆக்னஸ் பேசினார். உடன் திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் இரா. வயலட், திருநெல்வேலி மாநகர காவல் உதவி ஆய்வாளர் (தொழில்நுட்ப பிரிவு) சுபா, மாவட்ட அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி

திருநெல்வேலி

“பெண்கள் நினைத்தால் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம்” என்று `இந்து தமிழ்' நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழ் சார்பில், திருநெல்வேலி, வண்ணார்பேட்டை பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரியில் நேற்று நடைபெற்ற மகளிர் திருவிழாவில் மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஆக்னஸ் கூறினார்.

அவர் மேலும் பேசியதாவது:

பெண்கள் பொது வாழ்விலும், எல்லா துறைகளிலும் முன்னேறி வருகின்றனர். குழந்தைகளின் ஆளுமைத் திறன் வளர்ச்சிக்கு தொடக்கம் வீடு. தாயிடம் இருந்துதான் குழந்தையின் ஆளுமை வளர்கிறது. குழந்தைகளை சிறுவயதிலேயே விளையாட்டுப் பள்ளிகளில் சேர்க்கின்றனர். பள்ளி சூழல் வியாபாரமாக இல்லாமல் இனிமையானதாக இருக்க வேண்டும்.

ஆரோக்கியமே அழகு

நமது பகுதியில் ஏராளமான பெண்கள் பீடி சுற்றுகின்றனர். புகை பிடிப்பவர்களைவிட பீடி சுற்றும் பெண்களுக்குத்தான் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. சிவப்புதான் அழகு என்ற எண்ணத்தில் தேவையற்ற கிரீம்களை பயன்படுத்துகின்றனர். ஆரோக்கியமாக இருந்தால் இயல்பாகவே அழகான தோற்றம் ஏற்படும்.

சூரிய வெளிச்சம் உடலில் படாமல் இருப்பவர்களுக்கு வைட்டமின் பற்றாக்குறை ஏற்படுகிறது. எலும்புகள், மூட்டுகள் மட்டுமின்றிபல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. வீட்டை சுத்தமாக வைத்திருந்தால் வீதி, ஊர், நாடு சுத்தமாக இருக்கும். பெண்கள் நினைத்தால் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்றார்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி பேசும்போது, “திறமையானபல கலைஞர்கள் பெண்களின் உள்ளத்தில் தூங்கிக் கொண்டுள்ளனர். வளர்ப்பு முறையில் வரும் மாற்றங்கள்தான் சமுதாயச் சீரழிவுக்குக் காரணம். தமிழ் சமுதாயம் 2,600ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தறிவில் சிறந்த சமுதாயமாக இருந்திருப்பது, கீழடி ஆய்வுகள் மூலம் தெரிகிறது. நமது சமுதாயத்தின் பழமை, பெருமைகளை அடுத்த சந்ததியினருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்” என்றார்.

குறையும் வாசிப்பு பழக்கம்

மாவட்ட நூலக அலுவலர் இரா.வயலட் பேசும்போது, “மக்களிடம் வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. செல்போன், கணினி, டிவி போன்றவற்றில் அதிக நேரத்தை செலவழிக்கிறோம். வாசித்தல் என்பது மிகவும் நல்ல பழக்கம். பிள்ளைகளை நூலகத்துக்கு அழைத்துச் சென்று புத்தகங்களை படிக்க ஊக்கப்படுத்த வேண்டும்” என்றார்.

காவலன் எஸ்ஓஎஸ் செயலி குறித்து திருநெல்வேலி மாநகர காவல்துறை தொழில்நுட்பப் பிரிவு உதவி ஆய்வாளர் சுபா விளக்கம் அளித்தார். பெருமாள்புரம் லேடீஸ்கிளப் உறுப்பினர்கள், திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரிகலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதிய உணவுக்குப் பிறகு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டன.

மகளிர் திருவிழாவை ‘இந்து தமிழ்' நாளிதழுடன் லலிதா ஜுவல்லரி, பொன்வண்டு டிடர்ஜென்ட், பிரஸ்டீஜ் குக்வேர், ஆரெம்கேவி, சாஸ்தா வெட்கிரைண்டர், ராஜேஷ் எலெக்ட்ரிக்கல்ஸ், பூமர் லெகின்ஸ், எஸ்கேஎம் பூர்ணா ஆயில், ஏஜெஜெ மஸ்கோத் அல்வா, பிரான்சிஸ் சேவியர் பொறியியல் கல்லூரி, மயூரி டிவி ஆகியவை இணைந்து வழங்கின.

மகளிர் திருவிழா நிகழ்ச்சிகள் வரும் பிப். 2-ம் தேதி (ஞாயிறு) காலை 10 மணிக்கு திருநெல்வேலி, தென்காசியில் மயூரி டிவியில் ஒளிபரப்பப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x