Published : 26 Jan 2020 08:15 PM
Last Updated : 26 Jan 2020 08:15 PM
கல்லட்டி நீர் வீழ்ச்சியில் தண்ணீரில் மூழ்கிய உதகையை சேர்ந்த இருவரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம் உதகையை சேர்ந்தவர் சுந்தர்ராஜ். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தியின் ஈமச்சடங்குக்காக திருப்பூரை சேர்ந்த நண்பர்கள் ஆனந்த், விஜயகுமார் ஆகியோர் இன்று உதகை வந்துள்ளனர்.
ஈமச்சடங்கு முடிந்த பின்னர் சுந்தர்ராஜ், ஆனந்த, விஜயகுமார், உதகை விக்டோரியா ஹால் பகுதியை சேர்ந்த சாமுவேல்(23), எல்க்ஹில் பகுதியை சேர்ந்த கணேஷ்(24), பரத் ஆகியோர் கல்லட்டி நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.
அங்கு நண்பர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது சாமுவேல் எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்துள்ளார். அவரை காப்பாற்ற கணேஷ் கை கொடுக்க, அவரும் தண்ணீரில் மூழ்கியுள்ளார். இருவரும் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
இது குறித்து நண்பர்கள் புதுமந்து போலீஸாருக்கு தகவல் அளித்தனர்..
தகவலின் பேரில் புதுமந்து உதவி ஆய்வாளர் சிவகுமார் தலைமையில் போலீஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் கல்லட்டி நீர்வீழ்ச்சியில் வந்து உடல்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
‘இருள் சூழ தொடங்கி விட்டதால் நாளை(இன்று) உடல்கள் தேடுதல் பணி நடக்கும்’ என போலீஸார் தெரிவித்தனர்.
தண்ணீரில் விழுந்தவர்கள் உடல்கள் கிடைக்காததால் அவர்கள் இருவரும் உயிரிழந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
கல்லட்டி நீர்வீழ்ச்சி பகுதிக்கு செல்ல தடை செய்யப்பட்ட நிலையில், இவர்கள் அத்துமீறி நுழைந்து தண்ணீரில் குளித்தால் இந்த துயர் சம்பவம் ஏற்பட்டுள்ளது என போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT