Published : 26 Jan 2020 07:53 AM
Last Updated : 26 Jan 2020 07:53 AM
எஸ்.ஐ. வில்சனை கொலை செய்தது எப்படி என்பது குறித்து, களியக்காவிளை சோதனைச் சாவடியில்அப்துல் ஷமீம், தவுபீக் ஆகிய இருவரும் நேற்று போலீஸாரிடம் நடித்துக் காண்பித்தனர். வில்சனை துப்பாக்கியால் சுட்டதாக தவுபீக்கும், கத்தியால் குத்தியதாக அப்துல் ஷமீமும் தெரிவித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி இரவு பணியில் இருந்த சிறப்பு எஸ்.ஐ. வில்சன் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, திருவிதாங்கோடு அப்துல் ஷமீம், இளங்கடை தவுபீக் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கி, கத்தி மீட்பு
அவர்கள் அளித்த தகவலின் பேரில் வில்சன் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கியை கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள கழிவுநீர் ஓடையில் இருந்தும், கத்தியை திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையம் அருகிலிருந்தும், அவர்கள் வைத்திருந்த கைப்பையை நெய்யாற்றின் கரையிலும் போலீஸார் கைப்பற்றினர்.
வில்சனை கொலை செய்த விதம் குறித்து அறிவதற்காக நேற்று மாலை 5.30 மணிக்கு களியக்காவிளை சோதனைச்சாவடி பகுதிக்கு இருவரையும் போலீஸார் அழைத்து வந்தனர். அங்கு இருவரும் எவ்வாறு கொலை செய்தார்கள் என்பதை நடித்துக் காண்பித்தனர்.
5 முறை சுட்டதாக தகவல்
நெய்யாற்றின்கரையில் இருந்து கடந்த 8-ம் தேதி இரவு களியக்காவிளை சந்தை சந்திப்புக்கு இருவரும் ஆட்டோவில் வந்திறங்கிஉள்ளனர். துப்பாக்கியை தவுபீக்கும், கத்தியை அப்துல் ஷமீமும் மறைத்து வைத்திருந்துள்ளனர். அங்கிருந்து சுமார் 150 மீட்டர் தூரம் வேகமாக நடந்து சென்று, சோதனைச்சாவடியில் இருந்த எஸ்.ஐ. வில்சனை நோக்கி முதலில் தவுபீக் 5 முறை சுட்டுள்ளார். ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்த அவரை, அப்துல் ஷமீம் கத்தியால் பலமுறை குத்தியுள்ளார். வில்சன் இறந்து விட்டதை உறுதி செய்த பின்னர், பக்கத்தில் உள்ள பள்ளிவாசலின் பின்புறம் வழியாக ஓடி முன்புற வாயிலுக்கு இருவரும் சென்றுள்ளனர்.
அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்களிடம் இருவரும் லிப்ட் கேட்டுள்ளனர். யாரும் அவர்களை ஏற்றிச் செல்லாததால் அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கேரள எல்லைப்பகுதியான இஞ்சிவிளை வரை நடந்தே சென்றுள்ளனர். அன்று கேரளாவில் முழு அடைப்பு என்பதால் பேருந்துகள் ஓடவில்லை.
இதனால், வாடகை ஆட்டோவில் திருவனந்தபுரம் தம்பானூர் பேருந்து நிலையம் சென்றுள்ளனர். அங்கு கொலை செய்ய பயன்படுத்திய கத்தியை வீசியுள்ளனர். நள்ளிரவு 12 மணிக்கு பின்னர் பேருந்துகள் இயங்கியதைத் தொடர்ந்து, எர்ணாகுளம் செல்லும் பேருந்தில் ஏறி தப்பிச் சென்றதாக, இருவரும் கூறியதாக போலீஸார் தெரிவித்தனர்.
தீவிரவாத அமைப்பில் பயிற்சி பெற்ற தவுபீக்
இவ்வழக்கின் விசாரணை அதிகாரி டிஎஸ்பி கணேசன் கூறும்போது, ‘‘துப்பாக்கியால் சுடுவது குறித்து ஒரு தீவிரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சி பெற்றதை தவுபீக் ஒப்புக் கொண்டு உள்ளார். அது எந்த அமைப்பு என்பதை கண்டறிய தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். வில்சன் கொலையில் மேலும் பல முக்கிய ஆதாரங்களை திரட்டி வருகிறோம்’’ என்றார்.
வில்சனை துப்பாக்கியால் சுட்டபின், கத்தியாலும் குத்தியுள்ளனர். இதுகுறித்து விசாரித்தபோது, ‘‘ஒவ்வொரு தீவிரவாத அமைப்புக்கும் சதி திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு யுக்தி இருக்கும். எங்களது அமைப்பின் ஆலோசனைப்படி கத்தி, துப்பாக்கி இரண்டையும் பயன்படுத்தி கொலை திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றினோம்” என கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT