Published : 26 Jan 2020 07:37 AM
Last Updated : 26 Jan 2020 07:37 AM

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழாவில் 10 ஆயிரம் பேருக்கு சுடச்சுட பிரியாணி விருந்து- 4 மாநில ஓட்டல் உரிமையாளர்கள் பங்கேற்பு

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே வடக்கம்பட்டியில் முனியாண்டி கோயில் திருவிழாவையொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் அதிகாலை வரை ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுடச்சுட அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.

வடக்கம்பட்டியில் பிரசித்தி பெற்ற முனியாண்டி கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதம் வளர்பிறை வெள்ளிக்கிழமையில் பிரியாணி திருவிழா நடைபெறும். இங்குள்ள முனியாண்டி சுவாமியை குலதெய்வமாக வழிபடும் இக்கிராமத்தைச் சேர்ந்த நாயுடுமற்றும் ரெட்டியார் சமூகத்தினர்தமிழகத்தின் பல்வேறு ஊர்களிலும், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உட்பட பிற மாநிலங்களிலும் முனியாண்டி விலாஸ் எனும் பெயரில் நூற்றுக்கணக்கான அசைவ ஓட்டல்களை நடத்தி வருகின்றனர். ஓட்டல் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஒரு பகுதியை வருடம் முழுவதும் சேமித்து வருகின்றனர். சேமித்த தொகையைக் கொண்டு பிரியாணி திருவிழாவை நடத்துகின்றனர். இந்தாண்டு 85-வது பிரியாணி திருவிழா கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் காலையில் வடக்கம்பட்டி, பொட்டல்பட்டி, அகத்தாபட்டி மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக் கணக்கான நாயுடு சமூகத்தைச் சேர்ந்த பக்தர்கள் பால் குடம் எடுத்து ஊர்வலமாகச் சென்றனர். மாலையில் நிலைமாலையுடன் பூத்தட்டு ஊர்வலமும் நடைபெற்றது.

பின்னர், முனியாண்டி சுவாமிக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இரவு 12 மணியளவில் பூஜை செய்து முதலில் சக்தி கிடா பலியிடப்பட்டது. பின்னர் பக்தர்கள் நேர்த்திக்கடனாக வழங்கிய 150 கிடாக்கள், 300-க்கும் மேற்பட்ட கோழிகள் பலியிடப்பட்டன. அதன்மூலம் 1,600கிலோ அரிசியில் பிரம்மாண்டமான பாத்திரங்களில் அசைவபிரியாணியை ஏராளமான சமையல் கலைஞர்கள் தயாரித்தனர். பின்னர் முனியாண்டி சுவாமிக்கு படையலிட்டு நேற்றுஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சுடச்சுட அசைவ பிரியாணி வழங்கப்பட்டது.

இதுகுறித்து அக்கிராமத் தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர்கள் கூறியதாவது: தமிழகத்தின் பல கிராமங்களில் முனியாண்டி கோயில்கள் உள்ளன. ஆனால், வடக்கம்பட்டி கோயில்தான் ஆதி முனியாண்டி கோயில். இங்குள்ள கோயிலில் மட்டுமே பிரசாதமாக அசைவ பிரியாணி வழங்கப்படுகிறது. இக்கோயில் முனியாண்டியை குலதெய்வமாக வழிபடுவோர் தெய்வ வாக்காக, ஓட்டல்தொழிலில் கலப்படமின்றி சுத்தமான அசைவ உணவுகளையே வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x