Published : 25 Jan 2020 09:39 PM
Last Updated : 25 Jan 2020 09:39 PM
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இரண்டு யானைகள் விவசாய தோட்டம் அருகே உலாவிவருவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வன அதிகாரிகள் முகாமிட்டு யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் லக்கயங்கோட்டை மலைப் பகுதி அருகே ஏராளமான விவசாய தோட்டங்கள் உள்ளன.
இப்பகுதிக்கு இன்று காலை 6 மணி அளவில் இரண்டு யானைகள் வந்துள்ளன. இதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன் பேரில் மாவட்ட வன அலுவலர் தலைமையிலான வன அலுவலர்கள் மற்றும் உடனடி நடவடிக்கை மீட்புக்குழு வன உயிரின சிறப்பு அதிகாரிகள் போன்றவர்கள் இங்கு வந்து முகாமிட்டுள்ளனர்.
கடந்த 10 தினங்களாக ஒட்டன்சத்திரம் அருகே கன்னிவாடி, பண்ணப்பட்டி பகுதிகளில் சுமார் 20-க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டமாகச் சுற்றி திரிந்து வருகின்றன.
ஒரு வார காலத்திற்கு முன்பு பண்ணப்பட்டியைச் சேர்ந்த முருகன் என்பவரை யானை ஒன்று மிதித்துக் கொன்றது. அதனால் பொள்ளாச்சி கோவை கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதியில் உள்ள வன பாதுகாப்பு அலுவலர்கள் கன்னிவாடி பகுதியில் முகாமிட்டு இருந்தனர். அந்த யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட தொடர்ந்து முயற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் அந்த கூட்டத்தில் இருந்த இரண்டு யானைகள் பிரிந்து இரவோடு இரவாக நடந்து ஒட்டன்சத்திரம் அருகே இன்று காலை 6 மணி அளவில் வந்துள்ளன.
இப்பகுதியில் அதிகமாக விவசாய நிலங்கள் இருப்பதால் விவசாயிகள் பெரும் அச்சத்தில் உள்ளனர் அதனால் வன அலுவலர்கள் உடனடியாக வந்து இப்பகுதியில் முகாமிட்டு வெடிவைத்து அவற்றை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த யானைகள் இரவு முழுவதும் நடந்து வந்ததால் தற்போது அவற்றை விரட்டினால் சரிவராது என்று வன அலுவலர்கள் மாலை 5 மணிக்கு மேல் அவற்றை வெடிவைத்து விரட்ட முயற்சி செய்து வருகின்றனர் .
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT