Published : 25 Jan 2020 09:11 PM
Last Updated : 25 Jan 2020 09:11 PM
குடியுரிமை சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி சட்டப்பேரவையைக் கூட்டி சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தென்காசியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பேரணியில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
குடியுரிமை சட்டத்தைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில், குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரியும், சிஏஏ, என்ஆர்சி, என்பிஆர் ஆகிய சட்டங்களை தமிழகத்தில் நடைமுறைபடுத்த மாட்டோம் என்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நேற்று மாலையில் பேரணி நடைபெற்றது. தென்காசி ஹவுசிங்போர்டு காலனி அருகில் பேரணி தொடங்கியது.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாவட்டத் தலைவர் ஜலாலுதீன் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் யூசுப், மாவட்டச் செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் செய்யது மசூது, துணைத் தலைவர் அப்துல்காதர், துணைச் செயலர்கள் அப்துல் சலாம் ஹாஜாமைதீன், புகாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கிச் சென்ற பேரணியை தென்காசி புதிய பேருந்து நிலையம் அருகில் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அங்கு, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில பேச்சாளர் அப்துர்ரஹ்மான் பிர்தவ்ஸி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கிவைத்து பேசினார். மாநிலச் செயலாளர் தாவூது கைசர் கண்டன உரையாற்றினார். அதன் பின்னர், முக்கிய நிர்வாகிகள் மட்டும் தென்காசி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனுவை கொடுக்க அனுமதி அளித்தனர். அதன் அடிப்படையில், மாநிலச் செயலாளர் யூசுப் தலைமையில் நிர்வாகிகள் சிலர் கோரிக்கை மனுவை தென்காசி மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் அளித்தனர்.
பேரணியில், சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், புளியங்குடி, கடையநல்லூர், அச்சன்புதூர், வடகரை, செங்கோட்டை, பொட்டல்புதூர், தென்காசி உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுகுணா சிங் மேற்பார்வையில் துணை காவல் கண்காணிப்பாளர்கள் கோகுலகிருஷ்ணன், ஜாகிர் உசேன், சக்திவேல், பாலசுந்தர் மற்றும் காவல் ஆய்வாளர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT