Published : 25 Jan 2020 08:15 AM
Last Updated : 25 Jan 2020 08:15 AM

நிலத்தடிநீரில் உப்புத்தன்மையை போக்க நடவடிக்கை தேவை; உரத்துக்கான ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும்: நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை

வேலூரில் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை சார்பிலான நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டத்தில் பேசும் கனிமொழி.படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நடத்திய கலந்துரையாடல் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

வேலூரில் மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறை சார்பிலான நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் விவசாயிகளுடனான கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தலைமையில் வந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற இந்த கூட்டத்தை மத்திய,மாநில வேளாண் துறை, உர நிறுவனங்கள் இணைந்து நடத்தின. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.

கூட்டத்தை தொடங்கி வைத்து கனிமொழி பேசும்போது, ‘‘மருத்துவர்கள், பொறியாளர்கள் எனஎந்தத் துறையைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இறுதியில் விவசாயிகளையே நாடி வர வேண்டும். அந்த வகையில், விவசாயிகளின் பிரச்சினைகளை அறிந்து அதை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கவே நாங்கள் வந்துள்ளோம். இதில், அரசியல் இருக்கிறது என தயங்க வேண்டாம். இந்தக்குழு அரசியலை கடந்தது. இந்தக் குழுவில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர். எனவே, விவசாயிகள் தங்களது பிரச்சினைகளை தயக்கமின்றி கூறினால் மட்டுமே அதை மத்திய அரசிடம் எடுத்துக்கூறி தேவையான உதவிகளை பெற்றுத்தர முடியும்’’ என்றார்.

விவசாயிகள் வெளியேற்றம்

அதைத் தொடர்ந்து விவசாயிகள் கூறும்போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் பருவமழை பொய்த்து தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால் ஏராளமான விவசாயிகள் விவசாயத் தொழிலை விட்டு வெளியேறி விட்டனர்.

இதேநிலை நீடித்தால், இன்னும் 20 ஆண்டுகளில் விவசாயமே இருக்காது. விவசாயத்தை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. விவசாயத்துக்கு ரூ.1,000 கோடி ஒதுக்குவதால் மட்டும் விவசாயத்தை காப்பாற்ற முடியாது. விவசாயிகளை பாதுகாத்தால்தான் விவசாயம் காக்கப்படும்’’ என்றனர்.

தொடர்ந்து பேசிய விவசாயிகள், ‘‘வேலூர் மாவட்டத்தில் நிலத்தடிநீரின் உப்புத்தன்மை மிகவும் அதிகரித்துள்ளது. இதனால், பயிர் சாகுபடி பாதிக்கப்படுவதை தடுத்திட நிலத்தடிநீரில் உப்புத்தன்மையை குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

விலை அதிகரிப்பு

உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் தேவையான அளவில் தட்டுப்பாடின்றி கிடைக்கின்றன. ஆனால்,அவற்றின் விலை அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு 18 சதவீதம், உரத்துக்கு5 சதவீதம் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கான மானியத்தையும் 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்’’ என கோரினர்.

இந்தக் கூட்டத்தில், நிலைக்குழு உறுப்பினர்களான டி.எம்.கதிர்ஆனந்த், வசந்தகுமார், பிரதாப் ராவ் பாட்டீல், சத்தயதேவ் பச்சோரி, எம்.கே.விஷ்ணுபிரசாத், அஹ்மத் அஸ்பாக் கரீம், ஜிசி.சந்திரசேகர், விஜய்பால் சிங் தோமர், உரத்துறை இயக்குநர் பிரபாஸ் குமார், நிலைக்குழு இயக்குநர் ஏ.கே.வஸ்தவா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x