Published : 25 Jan 2020 08:08 AM
Last Updated : 25 Jan 2020 08:08 AM
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக தமிழக அரசு அனுமதித்துள்ள பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் பைகள் இயற்கையாக மக்காது என ஐநா சுற்றுச்சூழல் மன்றம் எச்சரித்துள்ளது.
ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலில் உள்ளது. பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையில், பெட்ரோலிய பொருட்கள் அல்லாத மக்கும் தன்மையுள்ள, மக்கும்போது காற்று, நீர், கனிமமாக மாறும் தன்மையுள்ள பொருட்களைக் கொண்டு தயாரிக்கப்படும் (பயோடீகிரேடபிள்) பிளாஸ்டிக் பைகளுக்கு, தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், உள்ளாட்சி அமைப்புகள், பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் பைகள் பயன்பாட்டை அனுமதித்துள்ளது. அதில் போலிகளையும் கண்டறிய முடியவில்லை. இதற்கிடையில் இந்த வகையான பிளாஸ்டிக்கும் எளிதில் மக்காது என ஐநா சுற்றுச்சூழல் மன்றம் எச்சரித்துள்ளது.
அந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தொடர்பான ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:
பிளாஸ்டிக்கால் ஏற்படும் மாசுவை குறைக்கும் விதமாக பெரும்பாலான அரசாங்கங்கள், வழக்கமாக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதித்து, பயோடீகிரேடபிள் பைகளை பயன்படுத்த அனுமதிக்கின்றன. இந்த வகை பிளாஸ்டிக், குறிப்பாக ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பைகள் மற்றும் கிண்ணங்கள் ஆகியவை, உயர் வெப்பநிலையில் 50 டிகிரி செல்சியஸூக்கு மேல் நீண்ட காலத்துக்கு இருந்தால் மட்டுமே முழுமையாக சிதைவடையும். இதுபோன்ற வெப்ப சூழல், கழிவுகளை எரிக்கும் உலைகளில் மட்டுமே இருக்கும். எனவே, மக்காச்சோள மாவு, மரவள்ளிக் கிழங்கு, கரும்பு மற்றும் சர்க்கரை அல்லது கொழுப்பு வகைகளை பாக்டீரியாவால் நொதிக்க செய்து தயாரிக்கப்படும் பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக், சூரிய ஒளி, காற்று, நீர் மூலமாகவோ, கடலிலோ தானாக சிதைவடையாது.
இவ்வாறு ஐநா சுற்றுச்சூழல் மன்ற ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் பைகளை அனுமதித்து வருவது குறித்து தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது "மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தல் அடிப்படையில் அனுமதித்து வருகிறோம். ஐநா சுற்றுச்சூழல் மன்றம் தெரிவித்திருப்பது குறித்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் மற்றும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் தெரிவித்து, அவை தரும் விளக்கம் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.
பெட்டி செய்தி:
கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் பிளாஸ்டிக் தடை தொடர்பான அரசாணையை, அப்போது தமிழக சுற்றுச்சூழல் துறை செயலராக
இருந்த நசிமுத்தின் வெளியிட்டார். இந்த தடை அமலுக்கு வந்த காலத்திலிருந்து, சுற்றுச்சூழல் துறை செயலராக சம்பு கல்லோலிகர் செயலராக உள்ளார். அவர், "மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது என்பதற்காக பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக்கை தமிழகத்தில் அனுமதித்து விட முடியாது. பிளாஸ்டிக்கும் மக்கும் தன்மை உடையது தான். ஆனால் எத்தனை ஆண்டுகள் ஆகும் என்பது தான் முக்கியம். எனவே பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக்கின் மக்கும் தன்மை குறித்து ஆய்வு செய்து, அதில் சாதகமாக இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படும்" என அறிவித்தார். மாதிரிகளும் சென்னையில் உள்ள சிப்பெட் நிறுவனத்தில் ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. அதில், பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் முறையாக மக்கவில்லை என தெரிகிறது. இதற்கிடையில் சம்பு கல்லோலிகருக்கு வந்த அழுத்தம் காரணமாக, பயோடீகிரேடபிள் பிளாஸ்டிக் விவகாரத்தில் அவர் தலையிடுவதில்லை என கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT