Last Updated : 21 Aug, 2015 03:49 PM

 

Published : 21 Aug 2015 03:49 PM
Last Updated : 21 Aug 2015 03:49 PM

‘தி இந்து’ இணைப்பிதழ்களின் கட்டுரைகளை காட்சிப்படுத்தியுள்ள அரசு பள்ளி மாணவிகள்

திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையத்தில் மாணவ, மாணவியரின் புதிய அறிவியல் சிந்தனைகளை வெளிப்படுத்தும் வகையிலான படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. ‘தி இந்து’ இணைப்பிதழ்களில் வெளியான கட்டுரைகளையும், அதன் அடிப்படையிலான விஷயங்களையும் சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவியர் காட்சிப்படுத்தியுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி மாவட்ட அறிவியல் மையத்தால் 3 நாட்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கண்காட்சி நேற்று தொடங்கியது. திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள 45 பள்ளிகளை சேர்ந்த மாணவர், மாணவியர் தங்களது 150 மாதிரிகளை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

‘புதிய அறிவியல் சிந்தனையை தூண்டுவது’ என்ற நோக்கத்தில் நடத்தப்படும் இக் கண்காட்சியின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளி மாணவர், மாணவியரின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதில் பல்வேறு படைப்புகள் கருத்தையும் கவனத்தையும் ஈர்க்கின்றன.

எளிய மோட்டார் சைக்கிள்

விக்கிரமசிங்கபுரம் சேனைத் தலைவர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சூ. கருப்பசாமி, சந்தோஷ்குமார், எஸ். சர்தார் பாஷா, அருள் செல்வன், பி. அந்தோணி பிரின்ஸ் ஆகியோர் சாதாரண சைக்கிளில் பெட்ரோலை எரிபொருளாக பயன்படுத்தும் மோட்டாரை பொருத்தி எளிய மோட்டார் சைக்கிளை இயக்கி காட்டினர்.

இந்த மோட்டார் பொருத்தப்பட்ட சைக்கிளில் 1 லிட்டர் பெட்ரோலுக்கு 90 கி.மீ. தூரம் வரையில் பயணம் செய்ய முடியும். பெட்ரோல் தீர்ந்துவிட்டால் சைக்கிளை மிதித்து கொண்டு செல்லலாம். இதற்காக கடந்த சில ஆண்டுகளுக்குமுன்பு வரை பயன்பாட்டில் இருந்த டிவிஎஸ் 50 மொபட்டிலிருந்து பழைய மோட்டாரை கழற்றி சைக்கிளில் பொருத்தி இருக்கிறார்கள்.

இந்த எளிய மோட்டார் சைக்கிளை உருவாக்கியுள்ளது குறித்து இந்த மாணவர்கள் கூறும்போது, சைக்கிளை எவ்வாறெல்லாம் வேறு பயன்பாட்டுக்கு கொண்டுவரலாம் என்று இணையதளத்தில் தகவல்களை திரட்டியிருந்தோம். அதன்மூலம் இந்த புதிய படைப்பை உருவாக்கியிருக்கிறோம். இதன் மூலம் குறைந்த செலவில் அதிக மைலேஜ் தரும் மோட்டார் சைக்கிள்களை உருவாக்க முடியும்’ என்று தெரிவித்தனர்.

இந்த எளிய மோட்டார் சைக்கிளை விக்கிரமசிங்கபு ரத்திலிருந்து அம்பாசமுத்திரம் ரயில் நிலையம் வரையில் ஓட்டிவந்து, அங்கிருந்து ரயில் மூலம் திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வந்தபின், அங்கிருந்து மாவட்ட அறிவியல் மையத்துக்கு ஓட்டி வந்துள்ளனர். அவ்வாறு ஓட்டிவரும்போது பலரும் வியப்புடன் இதை பார்த்ததை மகிழ்வுடன் மாணவர்கள் தெரிவித்தனர்.

உயிரூட்டப்பட்ட காற்று

திருச்செந்தூரிலுள்ள காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மாணவர்கள் சி. மகாராஜமுத்து, எச். சரவணசந்தர் ஆகியோர் உருவாக்கியிருக்கும் ‘உயிரூட்டப்பட்ட காற்று’ என்ற அமைப்பு பார்வையாளர்களை ஈர்க்கிறது.

தண்ணீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பான்கள் வந்துள்ளதைப் போன்று மாசுபட்ட காற்றை சுத்திகரித்து அறைகளில் நிரப்பி வைக்கும் தொழில்நுட்பத்தை எளிய முறையில் இந்த மாணவர்கள் உருவாக்கி வைத்திருந்தனர்.

இது குறித்து இம்மாணவர்கள் கூறும்போது, ‘தற்போது மாசுபட்ட காற்றையே சுவாசிக்க வேண்டியிருக்கிறது. இந்த காற்றை தூய்மைப்படுத்தி சுவாசிக்க வைக்க இந்த அமைப்பு உதவும். இந்த அமைப்பில் காற்றை உள்செலுத்தி, முதலில் அதிலுள்ள கடினமான துகள்களை பில்டர் செய்கிறோம். அடுத்து நுண்துகள்களை பில்டர் செய்யும் வடிகட்டும் அமைப்புக்குள் அந்த காற்று செலுத்தப்படுகிறது. பின்னர் அதில் வெட்டிவேர், நன்னாரி வேர், வசம்பு போன்ற மூலிகைகளின் வாசத்தை கலக்க செய்து தூய்மையான காற்றை அறைக்குள் செலுத்தும் வகையில் இதை கட்டமைத்திருக்கிறோம். இதுபோன்ற சிறிய அமைப்புகளை உருவாக்க ரூ.3 ஆயிரம் போதும்’ என்று தெரிவித்தனர்.

மூலிகை செடி வளர்ப்பு

பாளையங்கோட்டை சாராள்தக்கர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் எம்.சபிதா, எம். சுதர்சனா ஆகியோர் வீட்டுமாடிகளில், இடம் குறைவான இடங்களில் துத்தநாக தகடுகளால் உருவாக்கப்பட்ட அடுக்கு தொட்டிகளில் காய்கறி, மூலிகை செடிகளை வளர்க்கும் எளிய அமைப்பை காட்சிப்படுத்தி இருந்தனர்.

‘தேங்காய்நார் கழிவுகள் மற்றும் மணலை 2-க்கு 1 என்ற மடங்கில் தொட்டிகளில் போட்டு அவற்றில் செடிகளை வளர்க்கலாம். சொட்டுநீர் பாசனத்தில் இந்த செடிகளுக்கு தண்ணீர் தொட்டி மூலம் தண்ணீர் செலுத்தலாம். இதன்மூலம் வீட்டிலுள்ளவர்கள் வெளியூர்களுக்கு சென்றாலும் செடிகளுக்கு தண்ணீர் கிடைக்கும். ஈரப்பதம் எப்போதும் தொட்டிகளில் இருக்கும்’ என்று தெரிவித்தனர்.

‘தி இந்து’ இணைப்பிதழ்கள்

சேரன்மகாதேவி அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி மாணவிகள் எஸ். செல்வஜெயபாலா, எம். கார்த்திகா, எம்.அழகுசெல்வி, கலைகாருண்யா, ஸ்ரீமதி ஆகியோர் அறிவியல் ஆசிரியை ரமா பிரபா வழிகாட்டுதலில் அமைத்திருந்த அரங்கில் ‘தி இந்து’ வின் மாயா பஜார், நிலமும் வளமும் போன்ற இணைப்பிதழ்களில் வெளியான அறிவியல், சுற்றுச்சூழல், இயற்கை வேளாண்மை குறித்த பல்வேறு கட்டுரைகளை காட்சிப்படுத்தியிருந்தனர். வீட்டிலேயே எரு தயாரிக்கலாம் என்ற கட்டுரையின் அடிப்படையில் விளக்கங்களையும் இம்மாணவிகள் அளிக்கிறார்கள். மேலும் வீட்டில் பயன்படுத்தும் மிளகாய், மஞ்சள் பொடிகள், ரவை, சர்க்கரை போன்ற உணவுப் பொருள்களில் கலப்படத்தை எவ்வாறு கண்டறியலாம் என்று செயல்விளக்கமும் செய்து காண்பிக்கிறார்கள்.

மொத்தத்தில் இந்த கண்காட்சி மாணவ, மாணவியரின் படைப்புத் திறனை வெளிப்படுத்தும் சிறந்த அரங்கமாக இருக்கிறது. கண்காட்சியை வரும் 22-ம் தேதி வரை பொதுமக்களும், மாணவ, மாணவியரும் கட்டணம் ஏதுமின்றி பார்த்து மகிழலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x