Last Updated : 25 Jan, 2020 07:42 AM

 

Published : 25 Jan 2020 07:42 AM
Last Updated : 25 Jan 2020 07:42 AM

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்காத 8 ஆயிரம் மாணவர்களுக்கு கட்டணம் திருப்பி தரப்படவில்லை: நிதியை வேறு பணிகளுக்கு பயன்படுத்தியதால் அதிகாரிகள் தவிப்பு

சென்னை

பொறியியல் கலந்தாய்வு முடிந்து 6 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், முன்வைப்புத் தொகையாக செலுத்தப்பட்ட பணம் இன்னும் திருப்பி தரப்படவில்லை என மாணவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு 2018-ம்ஆண்டு முதல் இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலையின்கீழ் இயங்கும் 479 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு 1.72 லட்சம் இடங்கள் உள்ளன.

நடப்பு கல்வி ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்விஇயக்குநரகம் நடத்தியது. இந்தகலந்தாய்வில் பங்கேற்க சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து 1.02 லட்சம் மாணவர்கள் தகுதி பெற்றனர். அதைத்தொடர்ந்து ஜூன், ஜூலைமாதங்களில் நடைபெற்ற கலந்தாய்வின் முடிவில் 83,396 இடங்கள் நிரம்பின. அதேநேரம் 89,544 இடங்கள் வரை நிரம்பாமல் காலியாகிவிட்டன.

பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் முன்வைப்பு தொகையாக ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும். கலந்தாய்வில் இடம் கிடைத்து கல்லூரிகளில் சேரும்போது, அந்த முன்வைப்பு தொகையை கழித்து இதர கல்விக் கட்டணத்தை மாணவர்கள் செலுத்தினால் போதும்.

இந்நிலையில் கலந்தாய்வில்முழுமையாக பங்கேற்காமல் பாதியில் வெளியேறிய மாணவர்களுக்கு முன்வைப்புத் தொகை திருப்பித் தரப்படவில்லை என புகார்கள் எழுந்துள்ளன.

இதுதொடர்பாக மாணவர்கள் சிலர் கூறும்போது, “ பொறியியல் கலந்தாய்வில் கல்லூரியை தேர்வு செய்யாமல் பாதியில் வெளியேறினால் முன்வைப்பு தொகை 45 நாட்களுக்குள் முழுமையாக அளிக்கப்படும் எனதொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்திருந்தது. ஆனால் கலந்தாய்வு முடிந்து 6 மாதங்களாகிவிட்ட நிலையில், இதுவரை கட்டணம் திருப்பி தரப்படவில்லை.

இதுகுறித்து பலமுறை புகார்கள் அளித்தும் உரிய பதில் கிடைக்கவில்லை. இந்த தொகை அதிகாரிகளுக்கு சிறியதாக தெரியலாம். ஆனால், எங்களைப் போன்ற சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தமாணவர்களுக்கு அத்தொகை மிகவும் உதவியாக இருக்கும்’’ என்றனர்.

தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த ஆண்டு பல்வேறு காரணங்களால் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்காமல் பாதியில் வெளியேறினர். முன்வைப்பு தொகை மூலம் மாணவர்களிடம் பெறப்பட்ட நிதியானது இயக்குநரகத்தின் அலுவலகங்கள் மற்றும் கட்டுமான சீரமைப்பு பணிகளுக்கு தற்காலிமாக பயன்படுத்தப்பட்டது. அரசிடம் இருந்து நிதி கிடைத்ததும் மாணவர்களுக்கு வழங்க முடிவானது.

ஆனால், பல்வேறு காரணங்களால் நிதி முழுமையாக வந்துசேரவில்லை. இதையடுத்து மாற்று ஏற்பாடுகள் மூலம் இதுவரை 1,700 பேருக்கு பணம் திருப்பி தரப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மாணவர்களுக்கு விரைவில் பணம்கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, இதுவரை பணம் பெறாதவர்கள் முறையாக விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x