Published : 21 May 2014 06:02 PM
Last Updated : 21 May 2014 06:02 PM
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தினத்தையொட்டிய பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை தலைமை செயலகத்தில் ரத்து செய்தது கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஞானதேசிகன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் 'பாரத ரத்னா' ராஜீவ் காந்தி, விடுதலைப் புலிகளின் பயங்கரவாதத்தால் ஸ்ரீபெரும்புதூர் தமிழ் மண்ணில் மனித வெடிகுண்டால் சாய்க்கப்பட்டார்.
இந்திய தேசிய காங்கிரஸ் - அண்ணா திராவிட முன்னேற்ற கழக கூட்டணியின் வெற்றிக்காக தேர்தல் பிரச்சாரத்திற்கு சிரித்த முகத்தோடு தமிழகம் வந்திறங்கிய அந்த ரோஜா மலரை பாவிகள் இந்த மண்ணில் குற்றுயிரும், குலை உயிருமாக ஆக்கிவிட்டார்கள்.
பயங்கரவாதம் எந்த ரூபத்தில் இருந்தாலும் ஜாதி, இன, மத என்று எந்த போர்வையிலும் அதனை எதிர்க்க வேண்டும் என்கிற உறுதிமொழியை ஏற்கிற நாளாக ராஜீவ் காந்தி மறைந்த நாளில் உறுதிமொழி ஏற்கப்படுகிறது.
இந்த உறுதிமொழி ஏற்பு என்பது அரசியலைத் தாண்டி, யார் ஆட்சியில் இருக்கிறார்கள் என்பதையெல்லாம் தாண்டி இந்த தேசத்தில் பயங்கரவாதத்தை வேறோடும், வேரடி மண்ணோடும் சாய்ப்பதற்கான உறுதிமொழியை ஏற்கிற நாள். இதற்கு கட்சி வண்ணம் கிடையாது. அரசியல் கிடையாது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் இந்த உறுதிமொழி ஏற்பு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரால் ஏற்கப்பட்டு, ராஜீவ் காந்தி திருவுருவப் படத்திற்கு மரியாதை செலுத்தப்படுகிறது. அனைத்து அரசு அலுவலகங்களிலும் இது நடைபெறுகிறது.
ஆனால் இந்த ஆண்டு தலைமை செயலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருக்கிறது என்ற செய்தி பயங்கரவாதத்தை விட மிக பயங்கரமான செய்தியாக இருக்கிறது.
ஒரு பொதுவான உறுதிமொழியை, பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் எடுக்கிறோம் என்பதை காட்டுகிற நிகழ்ச்சியாய் எடுக்கப்படுகிற இந்த உறுதிமொழி இன்று ஏன் ஏற்கப்படவில்லை என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். இது மிகவும் கண்டனத்திற்குரியது" என்று ஞானதேசிகன் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT