Published : 24 Jan 2020 08:02 AM
Last Updated : 24 Jan 2020 08:02 AM
மக்களிடம் பொது போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில்புதிய ஆம்னி சொகுசு பேருந்துகளுக்கு இனி பர்மிட் தேவையில்லை என்ற முறையை மத்திய போக்குவரத்து அமைச்சகம் கொண்டுவரவுள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளிடம் மத்திய அரசு கருத்து கேட்டு வருகிறது.
நாட்டில் நகரமயமாக்கல் அதிகரித்து வருவதால், போக்குவரத்து வசதி என்பது அடிப்படை வசதியாக மாறிவிட்டது. இதையொட்டி, பேருந்துகளின் இயக்கத்தை அரசு போக்குவரத்து கழகங்கள் அதிகரித்து வந்தாலும், தேவையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளின் இயக்கமும் அதிகரித்து விட்டன.
அதன்படி, தமிழகத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளுக்கு சுற்றுலாபேருந்துகளுக்கான பர்மிட் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பொதுமக்களின் தேவையைக் கருத்தில் கொண்டு பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்துகளாகவும் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மத்திய போக்குவரத்து அமைச்சகம் மாநிலங்களின் போக்குவரத்து துறைக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, ‘‘சுற்றுச்சூழல் மற்றும் சாலை பாதுகாப்புஅம்சங்களைக் கருத்தில் கொண்டுநியாயமான கட்டணத்தில் பயணிக்க ஆம்னி சொகுசு பேருந்துகளுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ளன. அதன்படி, இனிவரும் புதிய ஆம்னி சொகுசு பேருந்துகளுக்கு பர்மிட் தேவையில்லை. இந்தப் பேருந்துகள் நியாயமான கட்டணத்தில், 22 பேருக்கும் மேல் பயணம் செய்யும் வகையில் இருக்க வேண்டும். இந்த புதியமுறை குறித்து மாநில அரசுகள்வரும் பிப்ரவரி முதல் வாரத்துக்குள் கருத்துகளைத் தெரிவிக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.
அரசு வருவாய் பாதிக்கும்
இதுதொடர்பாக போக்குவரத்துஆணையரக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டண வசூல், விதிமீறல்கள் போன்ற புகார்கள் வரும் போதெல்லாம் சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்துகளின் பர்மிட் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனஎச்சரிக்கை விடுப்போம். தொடர்ந்துவிதிமீறல்களில் ஈடுபட்டால், பர்மிட்சஸ்பெண்ட் போன்ற நடவடிக்கையை எடுத்து வருகிறோம். தற்போது, பர்மிட் குறித்து மத்திய போக்குவரத்து அமைச்சகத்தின் புதிய முறை, ஆம்னி பேருந்துகள் மீதான கட்டுப்பாடுகளை தளர்த் தும் விதத்தில் உள்ளன. மேலும், பர்மிட் மூலம் மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, அரசு போக்குவரத்து கழகங்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படும்’’ என்றனர்.
மக்களுக்கு பயன் அளிக்கும்
அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க பொது செயலாளர் எ.அன்பழகன் கூறும் போது, ‘‘தற்போது புதிய ஆம்னி பேருந்து ஒன்றுக்கு பர்மிட் வாங்க ரூ.6 ஆயிரம் கட்டணம் செலுத்துகிறோம். இந்த பர்மிட் 5 ஆண்டுகளுக்கு பொருந்தும். அதன்பிறகு மீண்டும் கட்டணம் செலுத்தி புதுப்பித்து வருகிறோம்.
இதற்கிடையே, புதிய ஆம்னி சொகுசு பேருந்துகளுக்கு இனி பர்மிட் வாங்கத் தேவையில்லை என்ற முறையை மத்திய அரசு கொண்டுவர திட்டமிட்டிருப்பது வரவேற்கத்தக்கது.
இதன்மூலம் ஆம்னி பேருந்து களில் அதிக அளவில் மக்கள் பயணம் செய்வார்கள். கூடுதல் போக்குவரத்து வசதியும் கிடைக் கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT