Published : 23 Jan 2020 10:55 AM
Last Updated : 23 Jan 2020 10:55 AM
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக 1996-ம் ஆண்டு முதல் தெரிவித்து வரும் நிலையில், ரஜினி அரசியலுக்கு வந்தால் அவர் எம்ஜிஆர் போல் ஆட்சியைப் பிடிப்பாரா? ரஜினியும் எம்ஜிஆரும் அரசியலைக் கைகொள்ளும் விதத்தில் உள்ள வேறுபாடுகள் குறித்து மூத்த செய்தியாளர், அரசியல் விமர்சகர் எஸ்.பி.லட்சுமணன் பதில் அளித்துள்ளார்.
இதோ வருவேன், இதோ வருவேன் என 24 வருடங்கள் வெற்றிகரமாக தமிழக மக்களையும், ரசிகர்களையும் சமாளிக்க முடியும் என்றால் அது ரஜினியால் மட்டுமே முடியும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர்கள்.
அதிமுக, திமுக இருபெரும் ஆளுமைகள் இருந்ததால் போட்டிக்கு வரும் கட்சிகள் எல்லாம் இருவருடன் கூட்டணி அமைக்கும் நிலைக்குத் தள்ளப்படும் நிலை தமிழகத்தில் உள்ளது. ஆண்டவனுடன் மட்டுமே கூட்டணி என்று அரசியலுக்கு வந்த விஜயகாந்தும் 2011-ல் அதிமுகவுடன் கூட்டு சேர்ந்தார். திமுக, அதிமுக இல்லாமல் வேறு 3-வது அணி அமைந்தால் அதுவும் திமுக அல்லது அதிமுகவுக்கே சாதகமாக அமையும் என்பதை 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியின் படுதோல்வி தெரிவித்தது.
தமிழகத்தில் பெரிய வெற்றிடம் உள்ளது. நான் முதல்வராக வருவேன், கட்சி ஆரம்பித்து 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவேன் என்று ரஜினி தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை கட்சி ஆரம்பிக்கவில்லை. விரைவில் வருவார் ஆட்சியைப் பிடிப்பார் என அவரது ஆதரவாளர்களும், தமிழருவி மணியன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட பலரும் தெரிவிக்கின்றனர்.
ரஜினி அரசியலுக்கு வந்தால் எம்ஜிஆர் போல் ஆட்சியைப் பிடிப்பாரா? என்கிற கேள்வியுடன் மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் எஸ்.பி.லட்சுமணனிடம் 'இந்து தமிழ் திசை' இணையதளம் சார்பில் பேசியபோது அவர் கூறியதாவது:
ரஜினியை எம்ஜிஆருடன் ஒப்பிடுகிறார்களே?
எம்ஜிஆர் மாதிரி ஆக முடியுமா? ஆகிறாரா? ஆக வாய்ப்புள்ளதா? என்று கேட்டால் அப்போது மன்றங்கள் வலுவாக இருந்தன. அப்போது போட்டிகள் இல்லாத உலகம். இன்று மொத்தமாக அனைத்தும் மாறியிருக்கிறது.
சமூக, அரசியல், பொருளாதாரச் சூழல் மாறிவிட்டது. ஏன் பொருளாதாரத்தைச் சொல்கிறேன் என்றால் அன்றைக்கு எந்த ஒரு நயா பைசாவையும் எதிர்பார்க்காமல் கரிக்கட்டையை எடுத்துக்கொண்டு சுவரில் எழுத ரசிகன் இருந்தான். தொண்டன் இருந்தான்.
ஆனால், இன்று அப்படி இல்லை. வட்டச் செயலாளரோ, ஒன்றியச் செயலாளரோ ஆயிரம், இரண்டாயிரத்தைக் கையில் கொடுக்காமல் கையில் போஸ்டரையோ, பெயிண்ட் டப்பாவையோ இன்றைய தொண்டர்கள் கையில் தூக்க மாட்டார்கள்.
இது எல்லோருக்கும் பொதுவானதுதானே. எம்ஜிஆரும் ரஜினியும் இதில் எங்கு வேறுபடுகிறார்கள்?
இதுமாதிரி அரசியல் மாறிய சூழலில் எம்ஜிஆர் தனது மன்றங்களை அப்படியே அரசியலுக்கு மாற்றினார். மக்கள் செல்வாக்கும் உடனடியாக அவருக்குக் கிடைத்ததால் ஆட்சியை நோக்கிச் சென்றார்.
அன்று எம்ஜிஆர் மன்றங்களை அரசியல் படுத்தியபோதே திமுகவில் ஆக்டிவாக இருந்தார். தனது படத்தில் முரசொலி படிப்பார், அண்ணாவைக் காட்டுவார், திமுக கொடியைக் காட்டுவார். அவரது சத்யா மூவிஸ் பிக்சர்ஸிலேயே திமுக கொடியை வைத்திருந்தார். ரசிகர்களுக்கு ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியை, அரசியல் பாதையைத் தெளிவுபடுத்திவிட்டார் எம்ஜிஆர். இதுதான் ரஜினிக்கும் எம்ஜிஆருக்கும் உள்ள வித்தியாசம்.
ரசிகர்கள் தொண்டர்களாக மாறியபோது அந்த ரசிகர்களுக்கு அரசியல் அறிவு இருந்தது. நாம் எந்தக் கொள்கையை நோக்கிப் போகிறோம், எந்த திசையில் பயணிக்கப் போகிறோம் என்கிற தெளிவு எம்ஜிஆர் ரசிகர்களுக்கு இருந்தது. அண்ணாதான் நமக்கு வழிகாட்டி என்கிற தெளிவு இருந்தது.
ரஜினி இங்கு எதில் வேறுபடுகிறார்?
இன்றுவரை ரஜினி எந்தத் திசையில் போகப்போகிறார் என்பது தெரியாது. மக்களுக்கும் தெரியவில்லை, ரசிகர்களுக்கும் தெரியவில்லை. அவருடை கொள்கை என்னவென்று தெரியாது. ஒரு உதாரணம். பெரியாரைச் சுற்றி அவரை ஆதரித்து அவரை கொள்கையையொட்டிச் செல்வாரா? அல்லது அதற்கு எதிரான கொள்கையில் செல்வாரா? என்கிற அடிப்படைக் கேள்வி தமிழ்நாட்டில் உள்ளது. அது இல்லாமல் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய முடியாது. அந்தக் கேள்விக்கே ரஜினியிடம் பதில் கிடையாது. அப்படியானால் ரசிகர்களே குழம்பி இருக்கும்போது இவர் எப்படி எம்ஜிஆர் ஆக முடியும்?
அப்படியானால் ரஜினி ரசிகர் மன்றம் எப்படி உள்ளது ?
உள்கட்டமைப்பு வேண்டும். ரஜினிக்கு ரசிகர் மன்றங்கள் உள்ளன. ஆனால், அது அரசியல் அறிவுசார்ந்த மன்றமாக இன்று இல்லை. அரசியல் தெளிவு உள்ள ரசிகர்களாக அவர்கள் இல்லை. அதனால்தான் கட்சி ஆரம்பிப்பதற்கு கால இடைவெளி குறைவாக இருக்கிறது என்று சொல்கிறேன். திடீர் என்று கட்சி ஆரம்பிக்க முடியாது.
எம்ஜிஆர் திமுக என்கிற அமைப்பிலிருந்து அதிமுகவைக் கொண்டுவந்தார். ரஜினிக்கு அப்படி என்ன இருக்கிறது?
ஆமாம். அதனால்தான் அரசியல் தெரிந்த அரசியல் பொறுப்பிலிருந்தவர்கள் வந்தார்கள். அதேபோன்று ரஜினி குறைந்தது ஓராண்டுக்கு முன்னால் கட்சி ஆரம்பித்தால்தான் அவருடைய கொள்கைகளைப் பார்த்து அடுத்த கட்சியிலிருந்து அரசியல் தெரிந்தவன் அவர் கட்சிக்கு வந்து சேருவான்.
ரஜினி 234 தொகுதியிலும் நிற்கப்போவதில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் ஏதாவது ஒரு ராமசாமி, குப்புசாமியைத்தான் ரஜினி நிப்பாட்டுவார். அந்த ராமசாமிக்கும், குப்புசாமிக்கும் அரசியல் தெளிவு இருக்கவேண்டும், அரசியல் தெரிந்தவராக இருக்கவேண்டும். திமுக, அதிமுகவைச் சமாளிக்கும் வலிமை பெற்றவராக இருக்க வேண்டும்.
2021-ல் நேரடியாக கட்சி ஆரம்பித்து சட்டப்பேரவைத் தேர்தலில் நிற்பேன் என்கிறாரே?
திடீர் என்று கட்சி ஆரம்பித்து 234 தொகுதிக்கும் ஆட்களை ரஜினி எப்படித் தேர்வு செய்வார்? அப்படியானால் இவர் சொல்கிற சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு என்றால், கெட்டுப்போயிருக்கிற சிஸ்டத்திலிருந்து ஒருத்தரை டக்கென்று எப்படித் தேர்வு செய்ய முடியும். அவசரத்துக்கு ஒரு தொகுதி, ரெண்டு தொகுதிக்கு வேட்பாளரை நிறுத்தலாம். 234 தொகுதிக்கும் கிடைக்கிற வேட்பாளரை நிறுத்தினால் அவர் கொண்டு வரப்போகிற அரசியல் தூய்மையான அரசியல் அல்ல, அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.
ஆனால், ரஜினி தரப்பில் அனைத்து மாவட்டங்களிலும் வார்டு வாரியாக மன்ற நிர்வாகிகளை போட்டுத் தயாராக உள்ளதாக சொல்கிறார்களே?
ரசிகர் மன்றம் இன்று ஆக்டிவாக இருப்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால், அந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு, ரசிகர்களுக்கு அரசியல் தெளிவு இருக்கிறதா? தலைவர் என்ன சொன்னாலும் சரி என்கிற ஒரு வரியைத் தவிர என்ன அரசியல் தெளிவு உள்ளது? எந்தத் திசையில் போகப்போகிறார்கள், உள்ளூரில் யாரைப் பகைத்துக கொள்ள வேண்டும், யாரிடம் நட்பு வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஏதாவது வழிகாட்டியுள்ளார்களா? திடீரென்று எப்படி எம்.எல்.ஏ ஆக முடியும்?
கொள்கை தெரிந்திருக்க வேண்டும். கொள்கையை அப்படியே ஜூஸ் பிழிந்து மண்டையில் ஏற்றிக்கொண்டிருக்க வேண்டும். அதற்குப் பின் மற்றவர்களிடம் போய்ச் சேர வேண்டும். இதற்கெல்லாம் கால இடைவெளி குறைவாக உள்ளது.
இந்த விஷயத்திலேயே நீங்கள் எம்ஜிஆர், ரஜினியை ஒப்பிட முடியாது. அன்றைக்கு இருந்த எம்ஜிஆர் ரசிகர்கள் அனைவரும் திமுகவில் அப்படியே ஊறிப்போய் இருந்தனர். அந்த திமுகவை அப்படியே கொண்டுவந்தார். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. கொள்கை வித்தியாசம் எதுவும் இல்லை. வேண்டுமானால் கூடுதலாக சில விஷயங்களை எம்ஜிஆர் சொன்னாரே தவிர இருக்கிற கொள்கைகளை மாற்றவில்லை.
அதனால் அரசியல் கொள்கையும் தெளிவும் இருந்த ரசிகர்கள் அப்படியே எம்ஜிஆருக்குக் கிடைத்தார்கள். இன்றைக்கு ரஜினிக்கு அது இல்லை. லட்சக்கணக்கான தொண்டர்கள் அவருக்கு இருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான மன்றங்கள் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கான அரசியல் பாதை எதுவென்று அவர்களுக்குத் தெரியவில்லை, அதுதான் பெரிய பலவீனம்.
சமீபத்தில் நான் வரமாட்டேன், முதல்வராக ஒருவரைக் கைகாட்டுவேன் என்று ரஜினி கூறியதாக ஒரு தகவல் வெளியானதே. இது சரியா?
முதன்முதலில் தமிழருவி மணியன் தான் ரஜினி அரசியலுக்கு வருவார் என்று பேச ஆரம்பித்தார். அந்தக்கூட்டத்தில் அவர் முதன்முதலில் சொன்னார். அவர் முதல்வராக வர மாட்டார் அவர் ஒருவரைக் கை காட்டுவார் என்று சொன்னார். இது ரஜினி சொன்ன வார்த்தைதான். ரஜினி ஜாதகத்தில் நம்பிக்கை உள்ளவர். அவர் ஜாதகமும் அதைத்தான் சொல்கிறது என்கிறார்கள்.
இப்போது புரிகிறதா? ரசிகன் எவ்வளவு குழப்பத்தில் இருப்பான் என்று. நாம் இருவரும் ரஜினி ரசிகன் என்று வைத்துக்கொள்ளுங்கள், நமக்கு இந்தத் தகவல் வந்து விழுந்தால் என்ன தோன்றும்.
“தலைவர் முதல்வராக வரமாட்டாராமே, தலைவர் இன்னொருவரைக் கை காட்டுவாராமே நாம் ஏன் அவருக்காக உழைக்கணும்” என்கிற சலிப்பு எனக்கு வரும். உங்களுக்கு லேட்டாக வரும். உங்களுக்கு நாளைக்குத் தோன்றும். எனக்கு இப்போதே தோன்றும். ஏனென்றால் ரஜினி என்பது மட்டுமே அனைவரையும் ரசிகனாக வைத்துள்ளது. அதைத் தாண்டி ரசிகர்கள் யாரையும் யோசிக்க மாட்டார்கள். அது எடுபடாது.
அப்படியானால் ரஜினி வாய்ஸை ரசிகர்கள் மதிக்கமாட்டார்களா?
ரஜினி இன்னொருவரைக் கை காட்டினால் அது எடுபடாது. எப்போது ரஜினி வாய்ஸ் எடுபடும் என்றால், ரஜினி முதலில் தான் அரசியல் களத்தில் இறங்கி, ஒரு கட்சி நடத்தி , மக்களுக்கான பிரச்சினைகளில் கலந்துகொண்டு, போராட்டம் நடத்தி மக்கள் மனதில் அரசியல் ரீதியாக இடம் பிடித்த பிறகு அவர் சொல்கிற அரசியல் கருத்துகளுக்கு மதிப்பிருக்கும். அதைச் செய்யாமல் அவர் எடுத்த எடுப்பிலேயே இன்னொருவரைக் கை காட்டினால் அது எடுபடாது.
ரஜினி வாய்ஸுக்குப் பலன் இருக்கு என்கிறார்களே?
எந்தக் காலத்திலும் எந்தத் தேர்தலிலும் ரஜினி சொன்ன எதுவும் எடுபடவில்லை, 96-ம் ஆண்டைத்தவிர. 96-ல் இருந்த சூழ்நிலையே வேறு. ஜெயலலிதாவுக்கு கடுமையான எதிர்ப்பு இருந்தது. அதில் பலபேரில் அவரும் ஒரு காரணமாக இருந்தார், ஆனால் 1998-லேயே அவர் வாய்ஸ் கொடுத்தும் அதிமுக கூட்டணி 30 மக்களவைத் தொகுதிகளைப் பிடித்தது.
பாஜகவுக்கு நான் வாக்களிக்கப் போகிறேன் என்று அப்போது ரஜினி சொன்னார். யாரும் ஆதரிக்கவில்லை, வாஜ்பாய் பலசாலி என்று சொன்னார். அவர் பலசாலி என்று யாருமே நம்பவில்லை. 10 பேர் ஒருவரை எதிர்த்தால் யார் பலசாலி என மோடியைப் பலசாலி என்று சமீபத்தில் சொன்னார். ஆனால், தமிழக மக்கள் துளிகூட மதிக்கவில்லை. அதனால் ரஜினி வாய்ஸுக்கு இதுதான் மரியாதை.
அவரே நான்தான் முதல்வர் என்று சொன்னால் அதற்குப் பலனிருக்கும். அதை நான் மறுக்கவில்லை. அதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு இருக்கும். ஆனால், அவர் இன்னொருவரைக் கை காட்டினால் அதற்கு எந்தப் பலனும் இருக்காது. இதுதான் யதார்த்தம்.
இவ்வாறு எஸ்.பி.லட்சுமணன் பதிலளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT