Published : 23 Jan 2020 10:21 AM
Last Updated : 23 Jan 2020 10:21 AM

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதிகள் சாகுபடி செய்த சின்ன வெங்காயம் அறுவடை: சந்தையை விட 20 சதவீதம் குறைந்த விலையில் விற்பனை

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் அறுவடை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தைக் காட்டுகிறார் சிறை கண்காணிப்பாளர் சங்கர்.

திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் கைதிகளால் சாகுபடி செய்யப்பட்ட சின்ன வெங்காயம் அறுவடை செய்யப்பட்டு இன்று(ஜன.23) முதல் விற்பனை செய்யப்படுகிறது.

திருச்சி மத்திய சிறையில் தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் என 1300-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நன்னடத்தை உள்ள கைதிகளைக் கொண்டு சிறை வளாகத்திலுள்ள காலி நிலங்களில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இங்கு நெல், தென்னை, மா, கரும்பு, சோளம் போன்றவற்றுடன், வேளாண் துறையினரின் அறிவுரையின்படி தக்காளி, கத்திரி, சின்ன வெங்காயம், கேரட் போன்றவையும் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் வெங்காயம் நேற்று முதல் அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடைப் பணி இன்றும் தொடரும் என சிறைத்துறையினர் தெரிவித்தனர். அறுவடை செய்யப்பட்ட வெங்காயத்தை தூய்மைப்படுத்தும் பணியில் கைதிகள் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். கைதிகளால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த வெங்காயத்தை, வெளிச்சந்தை விலையை விட குறைவான விலையில் மத்திய சிறையின் வெளிப்பகுதியிலுள்ள ‘சிறை அங்காடி’ மூலம் விற்பனை செய்ய சிறைத்துறை நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிறை கண்காணிப்பாளர் சங்கர் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘சிறை வளாகத்தில் அரை ஏக்கர் பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிட்டிருந்தோம். 3 மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அரை டன் அளவுக்கு மகசூல் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். ஜன.23-ம் தேதி (இன்று) முதல் சிறை வாசலில் உள்ள அங்காடியில் வெளிச்சந்தையைவிட 20 சதவீதம் குறைவான விலையில் இவை விற்பனை செய்யப்பட உள்ளன. பொதுமக்கள் இதனை வாங்கி பயன்பெறலாம்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x