Published : 22 Jan 2020 02:11 PM
Last Updated : 22 Jan 2020 02:11 PM
பாஜகவிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம் என தமிழக கிராம தொழில்துறை அமைச்சர் பாஸ்கரன் தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் எம்ஜிஆரின் 103-வது பிறந்தநாள் விழா பொதுக் கூட்டம் மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிவிழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தமிழக கதர் கிராம தொழில்த்துறை அமைச்சர் பாஸ்கரன், மானாமதுரை சட்டப்பேரவை உறுப்பினர் நாகராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள், கட்சித் தொண்டர்கள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் தமிழக கதர் கிராம தொழில்த்துறை அமைச்சர் பாஸ்கரன் ஆற்றிய உரையில், "பாஜகவிடம் இருந்து தனியாக பிரிந்து செல்வதற்கு நேரம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். எங்களின் அமைச்சரவையிலேயே எல்லாரும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஒருவேளை நாங்கள் பாஜகவிடம் இருந்து பிரிந்து சென்றாலும்கூட நீங்கள் திமுகவுக்கே வாக்களிப்பீர்கள் எனத் தோன்றுகிறது. திகார் சிறைக்கு சென்று வந்தவர்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
நீங்கள் எம்எல்ஏ தேர்தலில் எங்களுக்கு ஓட்டுப்போடவில்லை. நீங்கள் எங்களை ஒதுக்கிவிட்டீர்களேத் தவிர நாங்கள் உங்களை ஒதுக்க மாட்டோம்.
இளையான்குடியில் திமுகவினர் ஆளுங்கட்சியினர்போல் நடந்து கொள்கிறார்கள். அந்த அளவுக்கு சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள்.
உள்ளாட்சித் தேர்தலில் வெறும் 5 ஓட்டுக்கள் 3 ஓட்டுக்களில் எத்தனையோ பேர் தோற்றுள்ளார்கள். அதில் நாங்கள் ஏதாவது குளறுபடி செய்தோமா? அதை நாங்கள் செய்யவில்லை. ஏனென்றால், முதல்வர் எந்த வேலையையும் சரியாக செய்யச் சொல்லியுள்ளார். இதுவே திமுக ஆட்சியாக இருந்திருந்தால் மிரட்டி எண்ணிக்கையில் குளறுபடி செய்திருப்பார்கள்.
நாங்கள் சாதாரண மனிதர்கள். நீங்கள் எங்களை எப்போதும் அணுகலாம், நீங்கள் எம்எல்ஏவையும், சேர்மனையும், என்னையும் சட்டையைப் பிடித்து கேள்வி கேட்கலாம்" என்று பேசினார்.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியான இளையான்குடியில் அமைச்சர் பாஸ்கரன் இவ்வாறு பேசியிருப்பது கவனம் பெறுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT