Published : 22 Jan 2020 07:19 AM
Last Updated : 22 Jan 2020 07:19 AM
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 25 ஆண்டுகளாக குடைக்காரராக பணியாற்றி வந்த கே.என்.சீனுவாசன் பார்வேட்டை உற்சவத்தின்போது வரதரின் திருவடி சேர்ந்தார். கோயிலுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்ட அவர் கோயில் திருவிழாவின்போது உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் சந்நிதி தெருவைச் சேர்ந்தவர் கே.என்.சீனுவாசன்(54.) இவர் தந்தை கே.ஜி.நரசிம்மன், வரதராஜ பெருமாள் கோயிலில் சேவை அடிப்படையில் பணி குடைக்காரராக இருந்தார். இந்தப் பணி அவரது மகனான கே.என்.சீனுவாசனுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டது.
மணியக்காரார் பொறுப்பு
குடைக்காரர் பணி என்பது உற்சவர் புறப்பாட்டின்போது குடை பிடிக்கும் பணியாகும். இப்பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் ஈடுபட்டு வந்தார் சீனுவாசன். மேலும் இவரது சிறப்பான பணியை பாராட்டும்விதமாக, கடந்த 12 ஆண்டுகளாக கோயில் மணியக்காரர் பொறுப்பும் கூடுதலாக இவருக்கு வழங்கப்பட்டது. தனது பணிகள் மட்டுமின்றி கோயிலின் அனைத்துப் பணிகளிலும் ஆர்வத்துடன் ஈடுபட்டு வந்தார். இதனால் இவருக்கு ‘பாட்டாளி’ என்ற புனைப்பெயரும் உண்டு.
கடந்த 16-ம் தேதி பார்வேட்டை உற்சவத்துக்கு வரதராஜ பெருமாள் பழைய சீவரம் செல்லும்போது இவரும் உடன் சென்றார். அப்போது கோயில் உற்சவம் நடக்கும்போதே சீனுவாசனுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இவரை செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், இவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாலமாக செயல்பட்டார்
இவரது பணி குறித்து கோயில் செயல் அலுவலர் தியாகராஜனிடம் கேட்டபோது, “கோயிலில் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் சீனுவாசன் பணியாற்றினார். அவர் கோயிலுக்கும் அலுவலகத்துக்கும் ஒரு பாலமாக திகழ்ந்தார். அரசு சார்பில் அவரது குடும்பத்துக்கு தேவையான உதவிகளை கோயில் அலுவலகம் மூலம் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பெரும் இழப்பு
கோயில் அர்ச்சகர் டி.சீனுவாச பட்டரிடம் கேட்டபோது, “கோயில் பணிகள் அனைத்தையும் ஆர்வமுடன் செய்வார். கோயிலுக்காகவே தன்னை அர்ப்ணித்துக் கொண்டவர். கோயிலுக்குள் ஏதேனும் சிறு பூசல்கள் வந்தாலும் அவற்றை முன்னின்று தீர்த்து வைப்பார். அவரது இழப்பு கைங்கர்யபரர்களுக்கும், பணியாளர்களுக்கும் மிகுந்த இழப்பாகும்” என்றார்.
அரசு உதவிக்கு ஏற்பாடு
உயிரிழந்த சீனுவாசனுக்கு அமிர்தவள்ளி என்ற மனைவியும், சுதர்சன் என்ற மகனும், தேவி என்ற மகளும் உள்ளனர். மகள் கல்லூரியில் படித்து வருகிறார். மகன் தந்தைக்கு உதவியாக கோயில் பணிகளை சேவையாக செய்து வந்தார். இவரது மரணத்தால் குடும்பத்தினர் நிலைகுலைந்து உள்ளனர்.
அரசு சார்பில் அவர் குடும்பத்துக்கு கிடைக்க வேண்டிய உதவிகள் விரைவில் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பட்டாச்சாரியர்கள் பலர் வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT