Published : 21 Jan 2020 09:44 AM
Last Updated : 21 Jan 2020 09:44 AM
உள்ளாட்சித் தேர்தல் அதிகாரியின் திடீர் உடல்நலக் குறைவால் தலைவர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்ட கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியத்தில் வெற்றிபெற்ற அதிமுக, பாமக மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் மூன்று தினங்களுக்கு முன்பு முதல்வர் பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற நிலையில், தேர்தலை நடத்துமாறு மாவட்ட ஆட்சியரிடம் வேண்டுகோள் வைத்துள்ளனர்.
இரு கட்டங்களாக நடந்து முடிந்தஊரக உள்ளாட்சித் தேர் தலில் கடலூர் மாவட்டத்தில் மொத்தமுள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 287 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுக 110, திமுக 83, பாமக 25, தேமுதிக 17, விடுதலைச் சிறுத்தைகள் 10, தமாகா மற்றும் அமமுக தலா 4, காங்கிரஸ் மற்றும் பாஜக தலா 2, சுயேட்சைகள் 30 வார்டுகளையும் கைப்பற்றினர்.
இதில் அதிமுக 5 ஒன்றியங்களில் போட்டியின்றியும், 5 ஒன்றியங்களில் போட்டியிட்டும் வெற்றிவெற்றிபெற்றது. திமுக ஒரு ஒன்றியத்தில் போட்டியின்றியும், மற்றொன்றில் போட்டியிட்டும் வெற்றிபெற்றது. நல்லூர், மங்களூர் ஆகிய இரு ஊராட்சி ஒன்றியங்களில் தேதி குறிப்பிடப்படாமல் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது.
21 வார்டுகள் கொண்ட நல்லூர் ஒன்றியத்தில் திமுக, அதிமுக மற்றும் சுயேட்சைகள் தலா 7 வார்டுகளில் வெற்றிபெற்றிருந்த நிலையில், அதிமுக கூட்டணியில் நல்லூர் பாமகவிற்கு ஒதுக்கப்பட்டது. பாமகவின் இரு உறுப்பினர்கள் மற்றும் ஒரு சுயேட்சை ஆதரவோடு 10 நிச்சய உறுப்பினர்களோடு களம்கண்டது அதிமுக. திமுகவோ தனது 7 உறுப்பினர்கள் மற்றும் 4 சுயேட்சைகளுடன் களமிறங்க, தேர்தல் நடத்தவேண்டிய அலுவலர் நெஞ்சுவலி என்ற காரணத்தைக் கூறி அலுவலகத்திற்கு வராததால் தேதி குறிப்பிடாமல் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
இதேபோல் 24 வார்டுகளை கொண்ட மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் திமுக, அதிமுக தலா 10 வார்டுகளில் வெற்றிபெற்றிருந்த நிலையில், அதிமுக கூட்டணிக் கட்சியான தேமுதிக மற்றும் பாஜக தலா 1 உறுப்பினர்களோடு களமிறங்க, திமுகவோ தனது 10 உறுப்பினர்கள், ஒரு தமிழக வாழ்வுரிமை கட்சி மற்றும் ஒரு சுயேட்சை பலத்துடன் களமிறங்கிறது. இதனால் தேர்தல் அதிகாரி குலுக்கல் முறைக்கு பரிந்துரைத்தார். இதை ஏற்க மறுத்த அதிமுக போராட்டத்தில் ஈடுபட்டதால் இங்கும் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
குழு புகைப்படம்
இந்நிலையில் அதிமுக கடலூர் மேற்கு மாவட்டச் செயலாளர் அருண்மொழித்தேவன், விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், அமைச்சருமான சண்முகம் மற்றும் நல்லூர் ஒன்றியத்தில் வெற்றிபெற்ற அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி கவுன்சிலர்கள் முதல்வர் பழனிசாமியை சந்தித்து அவருடன் எடுத்துக்கொண்ட குழு படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். சுயேட்சையாக வெற்றிபெற்ற கவுன்சிலர்களையும் பலமாக கவனித்திருப்பதோடு, தொடர் கண்காணிப்பிலும் வைத்திருக்கிறதாம் ஆளும்தரப்பு.
இதுதொடர்பாக அருண் மொழித்தேவனிடம் கேட்டபோது, “இரு ஒன்றியங்களிலும் பெரும்பான்மையான உறுப்பினர்கள் எங்களோடு உள்ளனர். நல்லூரில் 11 உறுப்பினர்களும், மங்களூரில் 14 உறுப்பினர்களும் அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் நாங்கள் வெற்றி பெறுவது உறுதி. நல்லூர் ஒன்றியத்தில் வெற்றிபெற்ற ஒரு சுயேட்சை உறுப்பினர் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர். அவர் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதையடுத்து தான் முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று வந்தோம்” என்றார்.
இதுதொடர்பாக கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயலாளரும், திட்டக்குடி எம்எல்ஏயுமான கணேசனிடம் விசாரித்தபோது, “தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சியினரை கண்டு அஞ்சுகிறார்கள். தேர்தல் அதிகாரிக்கு உடல்நிலை சரியின்றி வர இயலாமல் போனால் உதவி தேர்தல் அதிகாரி தேர்தலை நடத்தலாமே! இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தொடர்புகொள்ள முயற்சித்தால், அவரது உதவியாளர் தான் பேசுகிறார். மாவட்ட ஆட்சியர் மக்கள் பிரதிநிதியான என்னிடம் பேச தயங்குவதேன்? ஆட்சியர் ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளர் போல் செயல்படுகிறார். தேர்தலை எதிர்கொள்ள அஞ்சுவது அதிமுக தான். நாங்கள் எப்போதும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகத்தான் இருக்கிறோம். எப்போது தேர்தல் நடைபெற்றாலும் வெற்றி எங்கள் பக்கம் தான்” என்றார்.
இதுதொடர்பாக கடலூர் ஆட்சியர் அன்புச்செல்வனிடம் கேட்டபோது, “தேர்தலின்போது சர்ச்சைகள் ஏற்பட்டதால், தேர்தல் ஆணையத்துக்கு தகவல் அளித்தோம். தேர்தல் ஆணையம் தேர்தலை தள்ளிவைக்க உத்தரவிட்டது. அதன்படியே தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தம் 27 ஒன்றியங்களுக்கான தேர்தல் நடத்துவது குறித்து தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அப்போது தான் இங்கும் தேர்தல் நடத்தப்படும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT