Published : 21 Jan 2020 07:22 AM
Last Updated : 21 Jan 2020 07:22 AM
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டியில் பிரம்மாண்டமான அளவில் கட்டப்பட்டுள்ள ஷீரடி சாய்பாபா கோயிலின் குடமுழுக்கு விழா நேற்று நடைபெற்றது.
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் அருகே அக்கரைப்பட்டி கிராமத்தில் சாய் கற்பக விருக்ஷா அறக்கட்டளை சார்பில் ‘தென் ஷீரடி’ என்று அழைக்கப்படும் விதமாக சாய்பாபா கோயில் கட்டப்பட்டுள்ளது.
இந்த கோயிலின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த நிலையில்,குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்யப்பட்டு, கடந்த 17-ம் தேதி யாகசாலையில் பூர்வாங்க பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து 18-ம் தேதி கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம் தொடங்கப்பட்டு, முதல் யாகசாலை பூஜை நடைபெற்றது. 19-ம் தேதி காலை 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலையில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றன.
குடமுழுக்கு தினமான நேற்று காலை 7 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜை, ஹோமம், மகா சங்கல்பம் ஆகியவை நடைபெற்றன. காலை 9 மணிக்கு பூர்ணாஹூதி நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. 9.15 மணிக்கு யாகசாலையிலிருந்து மங்கள வாத்தியங்களுடன் புனித நீர் கலசங்கள் புறப்பட்டு, 9.30 மணிக்கு அனைத்து கோபுரங்களுக்கும் ஒரே நேரத்தில் குடமுழுக்கு நடைபெற்றது.
தொடர்ந்து விநாயகர், ஷீரடி சாய்பாபா, தத்தாத்ரேயர், கிருஷ்ணர், ஆஞ்சநேயர் ஆகிய மூர்த்திகளுக்கு குடமுழுக்கு நடைபெற்று மங்கள ஆரத்தி காட்டப்பட்டது. இந்த விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT