Published : 21 Jan 2020 07:10 AM
Last Updated : 21 Jan 2020 07:10 AM
தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சுகோய்-30 ரக போர் விமானப்படைப் பிரிவை முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின்ராவத் நேற்று தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூரில் 1940-ம் ஆண்டு அமைக்கப்பட்ட விமானப்படை தளம் இரண்டாம் உலகப் போரின்போது செயல்பாட்டில் இருந்தது. இங்கிருந்து இங்கிலாந்து விமானப்படையை சேர்ந்த விமானங்கள் இயக்கப்பட்டன. சுதந்திரம் அடைந்த பிறகு இந்த விமானப்படை தளம் பயன்படுத்தப்படவில்லை. அதன்பின், இந்த தளத்தை சீரமைத்து 1988-ல் சிறிய பயணிகள் விமானம் (வாயுதூத்) சென்னைக்கு இயக்கப்பட்டது. பயணிகள் வருகை மிகவும் குறைந்ததைத் தொடர்ந்து நாளடைவில் இந்த சேவை நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தென்னிந்தியாவின் பாதுகாப்பில் பிரச்சினை ஏற்படும்போது, அவற்றை உடனடியாக சமாளிக்க, சுகோய் ரக போர் விமானங்களை இங்கிருந்து இயக்குவதற்கு தேவையான பணிகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டன.
கடந்த 2013-ல் தஞ்சாவூர் விமானப்படை தளத்தை அப்போதைய பாதுகாப்புத்துறை அமைச்சர், தரம் உயர்த்தப்பட்ட விமானத் தளமாக அறிவித்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து இங்கு சுகோய் விமானங்கள் மூலம் போர் விமானிகளுக்கு பயிற்சியும் தொடங்கி வைக்கப்பட்டது. சுகோய்-30 ரக போர் விமானத்தில் இருந்து தரை இலக்கை நோக்கி பிரம்மோஸ் ஏவுகணையை ஏவும் சோதனை கடந்த ஆண்டு பிப்.23-ம் தேதி விமானப்படையால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
தஞ்சாவூர் விமானப்படைத் தளம் மேலும் தரம் உயர்த்தப்பட்ட நிலையில், இங்கு சுகோய்-30 ரக விமானங்களை கொண்ட ஒரு விமானப்படை பிரிவை நிரந்தரமாக ஏற்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்றன.
இதையடுத்து, இந்திய விமானப்படையில் ‘டைகா் ஷார்க்ஸ்’ என்ற 222-வது போர் விமானப்படை பிரிவு தஞ்சாவூரில் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் பிரம்மோஸ் ஏவுகணைகள் பொருத்தப்பட்ட 8 எண்ணிக்கையிலான சுகோய்-30 ரக போர் விமானங்களும் நிறுத்தப்படும்.
இந்த படைப்பிரிவை முப்படைகளுக்கான தலைமை தளபதி பிபின் ராவத் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியது: முப்படைகளுடன் இந்த படைப்பிரிவை இணைப்பதால் எதிர்காலத்தில் மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும். பாதுகாப்பு துறையில் இது மிகப்பெரிய மாற்றமாகும். முதன்முறையாக பிரம்மோஸ் ஏவுகணை விமானத்தில் பொருத்தப்படுவது இதுவே முதன்முறையாகும் என்றார்.
ஹெலிகாப்டர் சாகசம்
இந்நிகழ்ச்சியில், விமானப்படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ்.பதோரியா, விமானப்படை அதிகாரிகள் அதுல்குமார்ஜெயின், அமித்திவாரி, பாதுகாப்புத் துறையின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறை செயலாளர் ஜி.சதீஷ்ரெட்டி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
முன்னதாக தஞ்சாவூர் விமானப்படை தளத்தில் சாரங் ஹெலிகாப்டர் குழுவினரின் சாகச நிகழ்ச்சி, சூரிய கிரன் எனப்படும் விமானங்களின் போர் அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சுகோய்-30 ரக போர் விமானம் தஞ்சாவூர் விமானப்படை தளத்துக்கு வந்தபோது, அதன் மீது தண்ணீர் பீய்ச்சி அடித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்திய பெருங்கடலில் ஆதிக்கம்
தொடர்ந்து பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்திய பெருங்கடல் அருகே அமைந்துள்ளதால், இந்த தஞ்சாவூர் விமானப்படை தளம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இந்திய பெருங்கடலில் சீனா தனது படை பலத்தை நிறுவுவதற்கும், தஞ்சாவூர் விமானப்படை தளத்தை தரம் உயர்த்துவதற்கும் தொடர்பில்லை. தஞ்சாவூரில் இந்த படைப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதால் எதிர்காலத்தில் அதிகளவு வீரர்கள் சேர்க்கப்பட்டு படை விரிவுபடுத்தப்படும். பாகிஸ்தானுடன் தற்போதைய சூழலில் போர் ஏற்படும் என்று சொல்வதற்கில்லை. இருந்தாலும் நம்முடைய படையை நாம் எப்போதும் தயார் நிலையில் வைத்துள்ளோம் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT