Published : 20 Jan 2020 05:01 PM
Last Updated : 20 Jan 2020 05:01 PM
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகைக்கு சிறையிலிருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதன் எதிரொலியாக சிறைச்சாலையில் நடத்திய அதிரடி சோதனையில் 10 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மிரட்டியதாக சிறையிலுள்ள டெல்லி நபர் மீது வழக்குப் பதிவாகியுள்ளது.
புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு இன்று (ஜன.20) மதியம் 1 மணியளவில் அழைப்பு ஒன்று வந்தது. மறுமுனையில் ஆங்கிலத்தில் பேசிய நபர், புதுச்சேரி ஆளுநர் மாளிகை மற்றும் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாகக் கூறிவிட்டு இணைப்பைத் துண்டித்தார். உடனடியாக இத்தகவல் பெரியகடை, ஒதியஞ்சாலை போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து பெரியகடை போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு ஆளுநர் கிரண்பேடியும் இருந்தார். ஆளுநர் மாளிகையைச் சுற்றியுள்ள சாலைகளில் தடுப்புகள் அமைத்து பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டது. போலீஸார் ஆளுநர் மாளிகை முழுவதும் அதிரடியாக சோதனை நடத்தினர். ஆனால், வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை.
இதேபோல் ரயில் நிலையத்திலும் ஒதியஞ்சாலை போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயுடன் சோதனை மேற்கொண்டனர். அங்கு இருந்த ரயில்கள் மற்றும் பயணிகளின் உடைமைகள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டன. ஆனால், இதிலும் எதுவும் சிக்கவில்லை.
அதேசமயம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண் குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர்.
தமிழக போலீஸாரின் தகவலின் அடிப்படையில் காலாப்பட்டில் உள்ள மத்திய சிறைச்சாலையில் இருந்து அழைப்பு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் தொடர்ந்து நடத்திய விசாரணையில் கடந்த டிசம்பர் 11-ம் தேதி கார் திருட்டு வழக்கில் பெரியகடை போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லியைச் சேர்ந்த நித்தீஸ் சர்மா (33) என்பவர் தான் செல்போன் மூலம் பேசி வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருப்பது தெரிந்தது.
இவர் ஆளுநர் மாளிகை மட்டுமின்றி, தமிழக காவல் கட்டுப்பாட்டு அறை, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் ஆகியவற்றுக்கும் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இது தொடர்பாக பெரியகடை மற்றும் ஒதியஞ்சாலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் காலாப்பட்டு சிறையில் போலீஸார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது 10 செல்போன்கள் மற்றும் சிம் கார்டுகள், சார்ஜர்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்தனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT