Published : 20 Jan 2020 10:35 AM
Last Updated : 20 Jan 2020 10:35 AM
தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் பங்கேற்கும் திருச்சி மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழ்நாட்டில் நடைபெற்று முடிந்த ஊரக பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. தேர்தல் நடைபெற்ற 512 மாவட்டக் கவுன்சிலர் பதவியிடங்களில் 242 இடங்களிலும், 5,074 ஒன்றியக் குழு உறுப்பினர் பதவியிடங்களில் 2,090 இடங்களிலும் திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
அரசியல் கட்சிகள் சாராத, பொதுச் சின்னங்களுடன் நடத்தப் பட்ட 9,619 ஊராட்சித் தலைவர், 76,662 கிராம வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல்களிலும் திமுகவைச் சேர்ந்த ஏராளமானோர் பொதுச் சின்னங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றனர்.
அதேபோல மறைமுகத் தேர்தல் களிலும் பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர், துணைத் தலைவர், ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவினர் பங்கேற்கும் மாநாடு திருச்சியில் ஜன.31-ம் தேதி நடைபெறும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார். இதையடுத்து, திருச்சி- திண்டுக்கல் சாலையில் தாயனூரிலுள்ள கேர் கல்லூரி வளாகத்தில் மாநாட்டு ஏற்பாடுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. முன்னாள் அமைச் சரும், திருச்சி தெற்கு மாவட்டச் செயலாளருமான கே.என்.நேரு மேற்பார்வையில் திருச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மட்டுமின்றி கட்சியின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் என 30 ஆயிரம் பேர் இம்மாநாட்டில் பங்கேற்பர் என எதிர்பார்க்கிறோம். அதற்கேற்ப பிரம்மாண்டமான பந்தல், தலைவர்களுக்கான மேடை அமைக்கப்பட உள்ளது. அதேபோல பங்கேற்கும் அனை வருக்கும் சைவ மற்றும் அசைவ விருந்தளிக்கும் வகையில் தனித்தனி உணவுக் கூடங்கள், அலங்கார வரவேற்பு வளைவுகள் போன்றவையும் அமைக்கப்பட உள்ளன.
இதற்கான பணிகள் தற்போது முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்ளாட்சிப் பிரதிநிதிகளை பாராட்டுவதுடன், இனிவரும் நாட்களில் அவர்கள் எவ்வாறு மக்கள் பணியாற்ற வேண்டும். அவரவர் பகுதிகளில் கட்சியை வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட ஆலோசனைகளும் இந்த கூட்டத்தில் அளிக்கப்பட உள்ளன என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT