Published : 20 Jan 2020 07:55 AM
Last Updated : 20 Jan 2020 07:55 AM
காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நேற்று முன்தினம் பெய்த திடீர் மழையால் வயல்களில் சாய்ந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
காவிரி டெல்டா மாவட்டங் களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் திருச்சி மாவட்டங்களில் இந்த ஆண்டு சம்பா, தாளடி பருவத்தில் 4.5 லட்சம் ஹெக்டேரில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனர்.
மேட்டூர் அணையிலிருந்து தேவையான அளவுக்கு தண்ணீர்திறப்பு மற்றும் சீரான வடகிழக்கு பருவமழை பெய்ததன் காரணமாகவும், இதமான தட்பவெட்ப சூழல் நிலவியதாலும் நெற்பயிர்கள் நன்கு செழித்து வளர்ந் திருந்தன.
இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு நல்ல மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் பல இடங்களில் நெல்மணிகளின் பாரம் தாங்காமல் நெற்பயிர்கள் சாயத் தொடங்கின. இவற்றை விவசாயிகள் சேர்த்துக் கட்டி பாதுகாத்து வந்தனர்.
இந்நிலையில், டெல்டா மாவட்டங்களில் பரவலாக அனைத்துப் பகுதிகளிலும் திடீரென நேற்றுமுன்தினம் பெய்த மழை காரணமாக வயலில் சாய்ந்திருந்த நெற்பயிர்களை மழைநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் நெற்பயிர்கள் மழை காரணமாக வயலிலேயே சாய்ந்துவிட்டன. நல்ல மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த விவசாயிகள் தற்போது பெய்த மழையால் ‘கைக்கு எட்டியது வாய்க்கு எட்டுமா’ என்ற கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன், ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:
பல ஆண்டுகளுக்குப் பிறகுதற்போதுதான் சம்பா பருவத்தில் பயிர்கள் நன்றாக வளர்ந்து, அதிக மகசூல் கிடைக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், ஒரே நாள் மழையில் விவசாயிகளின் நம்பிக்கை தகர்ந்துள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பாகவே பல இடங்களில் அறுவடைப் பணிகள் தொடங்கி விட்டன. ஆனால், தமிழக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை முறையாக திறக்காததால் அறுவடை செய்யப்பட்ட நெல்மணிகள், கொள்முதல் நிலையங்களில் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. அவையும் தற்போது மழையில் நனைந்துவிட்டன. மேலும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க தாமதமானதாலும் அறுவடையை விவசாயிகள் தாமதப்படுத்தி வருகின்றனர்.
இந்த மழை காரணமாக ஒரு ஏக்கருக்கு ஏறத்தாழ 10 மூட்டை அளவுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். சாய்ந்துள்ள நெற்பயிர்களில் இருந்து நெல்மணிகள் வயலில் கொட்டி வீணாகும். எனவே, தமிழக அரசு நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.2,500 விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய வேண்டும்.
ஒரு நாள் மழை…
தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (ஜன.18) 232 மில்லி மீட்டரும், திருவாரூர் மாவட்டத்தில் 182.4 மில்லி மீட்டரும், நாகை மாவட்டத்தில் 111.4 மில்லி மீட்டரும், திருச்சி மாவட்டத்தில் 148.8 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT