Published : 17 Jan 2020 05:40 PM
Last Updated : 17 Jan 2020 05:40 PM
அலங்காநல்லூர் வாடிவாசலில் காவல் ஆய்வாளர் ஒருவரின் காளை, மாடுபிடி வீரர்கள் நெருங்கக் கூட முடியாத வகையில் 7 நிமிடங்கள் நின்று விளையாடியது.
இந்தக் காளையை தொட்டலே பரிசு என்று பிரம்மாண்ட பரிசுகளை விழாக்குழுவினர் அறிவித்தும் மாடுபிடி வீரர்களால் அதை தொடக்கூட முடியவில்லை.
அலங்காநல்லூர் வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட பல காளைகள், மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் நிண்ட நேரம் நின்று விளையாடின. அதில்,
புதுக்கோட்டையைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் அனுராதாவின் ‘ரமணா’ என்ற காளை முக்கியமானது. வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட இவரது காளை சுமார் 7 நிமிடங்கள் வரை நின்று விளையாடியது.
மாடுபிடி வீரர்களால் இந்த காளையை நெருங்க முடியவில்லை. இந்த காளையின் பிரமாதமான ஆட்டத்தைப் பார்த்து விழாக்குழுவினர், இந்த மாட்டை மாடுபிடி வீரர்கள் தொட்டாலே பரிசு என்று பிரமாண்ட பரிசுகளை அறிவித்தனர். ஆனாலும், கடைசி வரை மாடுபிடி வீரர்கள் அந்தக் காளையைத் தொடக்கூட முடியவில்லை.
• அலங்காநல்லூரைச் சேர்ந்தவர் வினோத் (எ) சிந்தாமணி. இவர் ஜல்லிக்கட்டு காளை வளர்க்கிறார். இவரது காளை இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்றது. வீரர்களின் பிடியில் சிக்காமல் தப்பியது. இவருக்கு சிறப்புப் பரிசுகள் வழங்கப்பட்டன.
* எஸ்பி மணிவண்ணன் தலைமையில், 3,000 போலீஸார் அலங்கநல்லூர் ஊர் எல்லையில் இருந்து வாடிவாசல் வரை 3 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
ஊர் எல்லையிலே வாகனங்கள் நிறுத்தப்பட்டு அதற்காக நிறுவப்பட்ட சிறப்பு பார்க்கிங் பகுதியில் நிறுத்தப்பட்டு பார்வையாளர்கள் நடந்தே வாடிவாசல் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அதன்பிறகு இரண்டாவது அடுக்காக போலீஸார், ஜல்லிக்கட்டு நடந்த திடலை சுற்றிலும் தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைத்து, போட்டியை காண டோக்கன் வைத்திருந்தவர்களை மட்டுமே ஜல்லிக்கட்டு திடலுக்கு அனுமதித்தனர்.
மூன்றாவது கட்டமாக, அந்த டோக்கனை பரிசோதனை செய்தப்பிறகே போலீஸார் பார்வையாளர்களை கேலரியில் அமர்வதற்கு அனுமதித்தனர்.
* சிறப்பு வாய்ந்த அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பரிசுகள் அள்ளி குவித்த காளைகள் வரும்போது அதன் பெயரையும், பெருமைகளையும் சொல்லியும், அந்த காளைகள் அடக்கப்பட்டால் அதன் மீது 2 பவுன் தங்க செயின், ப்ரிட்ஜ், வாஷிங் மிஷின், எல்இடி டிவி, ரொக்கப்பணம் உள்ளிட்ட சிறப்பு பரிசுகள் அறிவித்து மாடுபிடி வீரர்களை விழாக்குழுவினர் உசுப்பேற்றினர்.
அந்த காளை, மாடுபிடி வீரர்களை நெருங்க விடாமல் திமிறிக் கொண்டு நின்று விளையாண்டால், ‘‘ஏ சூப்பர் சூப்பர், இதுதானய்யா மாடு, தொட்டு பாரு, ’’ என்று போட்டியை விறுவிறுப்பாக்கினர்.
சிறப்பாக காளைகளை அடக்கும் மாடுபிடி வீரர்களையும், ‘பிரமாதம், ஆ..சூப்பர்யா, ’ என்ற சொல்லி பாராட்டவும் தவறவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT