Published : 17 Jan 2020 03:04 PM
Last Updated : 17 Jan 2020 03:04 PM
பாலமேடு ஜல்லிக்கட்டில் 16 காளைகளை அடக்கி சிறந்த மாடுபிடி வீரராகத் தேர்வான இளைஞர் பிரபாகரனையும் காளை முட்டியதால் காயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று கோலாகலமாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிப் பாய்ந்த காளைகளை சற்றும் உற்சாகம் குறையாமல் அடக்க முயன்று கொண்டிருந்த பிரபாகரனை காளை ஒன்று பதம்பார்த்தது. இதில் அவருக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் இன்றைய ஜல்லிக்கட்டுப் போட்டியில் தொடர்ந்து பங்கேற்காமல் ஓய்வெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
முன்னதாக நேற்று பாலமேட்டில் நடந்த போட்டியில் மதுரை பொதும்பைச் சேர்ந்த பிரபாகரன்(24), என்ற இளைஞர் மாருதி கார் பரிசாக வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
என் சுவாசமே ஜல்லிக்கட்டுதான்..!
முன்னதாக இந்து தமிழ் நாளிதழுக்குப் பேட்டியளித்திருந்த பிரபாகரன், "எனக்கு நண்பர்கள்தான் எல்லாமே. பாலமேடு போட்டியில் கார் பெறுவதற்கும் அவர்கள்தான் காரணம். என்டோட மாடுபிடிக்கும் திறமையை பார்த்து நண்பர்கள் ஊக்குவித்தனர்.
அவர்களுடன் என்னுடன் களம் இறங்கி வாடிவாசலில் காளைகளை பிடிக்க உதவுவார்கள். என் சுவாசமே ஜல்லிக்கட்டுதான்.
14 வயதில் இருந்தே ஊர் ஊராக சென்று ஜல்லிக்கட்டுப்பார்ப்பேன். 2014ம் ஆண்டில் இருந்து மாடுபிடிக்க ஆரம்பித்தேன். இதற்கு முன், சிறந்த மாடுபிடி வீரராக பாறைப்பட்டியில் பைக் பரிசு பெற்றுள்ளேன். திருச்சி கருங்குளத்தில் சிறந்த மாடுபிடி வீரராக 2017ம் அரை பவுன் மோதிரமும், 2018ம் ஆண்டில் 2 பவுன் செயினும் வாங்கி உள்ளேன்.
திருப்புவனம் அருகே கடந்த ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டில் ப்ரிட்ஜ் வாங்கியுள்ளேன். உசிலம்பட்டி ஏழுமலையில் தொடர்ந்து கடந்த 2 ஆண்டாக சிறந்த மாடுபிடி வீரராக பரிசு பெற்றேன். பரிசுகளை கிடைக்கிறது என்பதற்காக காளைகளை அடக்க மாட்டேன். ஜல்லிக்கட்டில் பங்கேற்பதற்காக பிரத்தியேக பயிற்சிகள் என்று தனியாக எடுக்க மாட்டேன். போட்டி நேரத்தில் மட்டும் சில நாள் காளைகளை நண்பர்களுடன் சேர்ந்து அடக்குவேன்" எனக் கூறியிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT